

'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்று பெயர் இருப்பதே நல்லது என்று நடிகர் பிரபு விருப்பம் தெரிவித்துள்ளார்.
2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், இன்று (ஜூன் 23) காலை முதல் நடைபெற்று வருகிறது. மயிலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் நடைபெற்று வரும் இந்தத் தேர்தலில், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.
இந்தத் தேர்தலில் வாக்களித்துவிட்டு நடிகர் பிரபு பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும் போது, “திரையுலக கலைஞர்களுக்கு உதவ வேண்டும் என்று தான் சங்கம் தொடங்கப்பட்டது. ஆகையால், யார் ஜெயித்தாலும் ஒன்றாக இருக்க வேண்டும். கட்டிடத்தை நல்லபடியாக கட்டி முடிக்க வேண்டும். நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்ய வேண்டும். எங்கப்பா இந்த சங்கத்தை ஆரம்பித்ததில் ஒருவர். அவருடைய கனவை எந்த அணி ஜெயித்தாலும் நனவாக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் லோகோவே ஒரு தாயின் கீழ் 4 குழந்தைகள் இருப்பது போல் இருக்கும். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகியவைதான் அந்த 4 குழந்தைகள். அந்தத் தாய் இந்தியத் தாய். ஆகையால், பெயர் மாற்றம் எந்தளவுக்கு சாத்தியமாக இருக்கும் என்று தெரியவில்லை. இருப்பினும், அனைவரும் இது குறித்து உட்கார்ந்து பேசலாம். இதில் உறுப்பினர்களாக அனைத்து மொழி நாயகர்களும் இருக்கிறார்கள்.
ராஜ்குமார் ஐயா, நாகேஸ்வர ராவ் ஐயா, என்.டி.ஆர் ஐயா உள்ளிட்ட பலர் வாழ்நாள் உறுப்பினர்கள். அதெல்லாம் மனதில் வைத்துப் பார்த்தால் தென்னிந்திய நடிகர் சங்கம் என்று இருப்பது நல்லது. இதில் வாக்களிக்க வர இயலாதவர்களை ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால், வந்தவர்களை ஜனநாயக முறைப்படி வாக்களிக்க வைக்க வேண்டியது நம் கடமை” என்று தெரிவித்துள்ளார் பிரபு