

இது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது என்று நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக சாந்தனு கருத்துக்கு நடிகர் பிரசன்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.
2019-2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் கடும் பாதுகாப்புடன் தொடங்கியது. பாண்டவர் அணி மற்றும் சுவாமி சங்கரதாஸ் அணி என இரண்டு அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது.
இந்தத் தேர்தலில் சுவாமி சங்கரதாஸ் அணியில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் பாக்யராஜ். பாண்டவர் அணியினர் தங்களுடைய பேச்சில் குறிப்பிடும் போது, பாக்யராஜை கடுமையாக சாடினார்கள்.
இது தொடர்பாக பாக்யராஜின் மகன் நடிகர் சாந்தனு, “தேர்தல் என்ற பெயரில் எவ்வளவு முட்டாள்தனம் நடக்கிறது என்பதற்கு நடிகர் சங்கத் தேர்தலே சாட்சி என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அனைத்தையும் தாண்டி நமக்குள் ஒரு பந்தம் இருக்கிறது. ஆனால் கண்ட பூச்சி எல்லாம் “பாக்யராஜ் யாரு? நடிகரா?” என்று கேட்பதெல்லாம் அருவருப்பாக இருக்கிறது. நாசர், கார்த்தி, விஷால் நீங்கள் பேசும்போது கூடவே செட் ப்ராப்பர்ட்டிகளையும் பேச விட்டால் உறவுகள் கெட்டுப் போய்விடும்” என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
அவரது கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக நடிகர் பிரசன்னா, “நீ சொல்வதை முழுமையாக ஆதரிக்கிறேன் சோனு. இது அமைதியாக நடக்க வேண்டிய விஷயம். ஏன் மீடியாவிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று தெரியவில்லை. விவாதங்களுக்குச் செல்வதும், ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதும். பொதுமக்களுக்கு இதைப் பற்றியெல்லாம் தெரியவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் கவலைப்படுவதற்கு லட்சக்கணக்கான முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. இது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது” என்று தெரிவித்துள்ளார்.