Last Updated : 15 Jun, 2019 11:20 AM

 

Published : 15 Jun 2019 11:20 AM
Last Updated : 15 Jun 2019 11:20 AM

’அது மந்திரக்குரல்!’ - இன்று மலேசியா வாசுதேவன் பிறந்தநாள்

பாட்டு, யாருக்குத்தான் பிடிக்காது? குத்துப்பாட்டு, காதல் பாட்டு, மெல்லிசைப் பாட்டு, சோகப்பாட்டு, தத்துவப்பாட்டு என்று பாடலில் பல ரகங்கள். இவற்றில் இதுஇதுதான் பிடிக்கும் என்று சொல்லுபவர்களும் இருக்கிறார்கள். பாட்டு... அவ்ளோதான். அதுல இப்படியென்ன... அப்படியென்ன... எல்லாமே பிடிக்கும் என்று சொல்பவர்களும் உண்டு. அப்படி எந்தப் பாட்டு வகையை, எவர் பாடினாலும் பிடிக்கும். அப்படி எல்லா வகைப் பாட்டுகளையும் பாடி, பட்டையைக் கிளப்பியவர்களில்... தனித்துவம் மிக்கவர் மலேசியா வாசுதேவன்.

‘இப்படி வகையான பாட்டுதான்’ என்கிற வரையறைகளுக்குக் கட்டுப்படாத குரலுக்குச் சொந்தக்காரர். இளையராஜா குழுவில் அந்தக் காலத்திலேயே நண்பர். அப்படியே வாய்ப்புகள் தேடிக்கொண்டிருந்தவருக்கு வந்த வாய்ப்பும் சொல்லிக்கொள்ளும்படியில்லை.

‘16 வயதினிலே’ படம் தொடங்கிய போது, முதல்நாள் ரிக்கார்டிங் செய்ய பாட்டெல்லாம் ரெடி. ஆனால் எஸ்.பி.பி.க்கு சற்றே நலமின்மை. ‘என்னய்யா இது..’ என்று பாரதிராஜா புலம்ப, ‘ஏன் புலம்பறே? அமைதியா இரு’ என்று சொன்ன இளையராஜா, திரும்பினார். ‘டேய் வாசு. டிராக் ஒண்ணு பாடணும். அதுவும் கமலுக்குப் பாடணும். சரியாப் பாடினா, இந்தப் படத்துலேருந்தே உனக்கொரு வெற்றிப் பயணம் கிடைக்கலாம்டா. நல்லாப் பாடுடா’ என்று மலேசியா வாசுதேவனிடம் சொல்லிப் பாடவைத்தார் ராஜா. எல்லோருக்கும் பிடித்துவிட்டது. ‘செவ்வந்திப் பூ முடிச்ச’ பாடல், ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..’ பாடல். ரெண்டுமே சூப்பர் ஹிட்.

அடுத்தடுத்து தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கினார் இளையராஜா. அதுவும் எப்படி? ரகம்ரகமாய், தினுசுதினுசான பாடல்களை வழங்க, அந்தப் பாடல்களை வைத்து சிக்ஸர் சிக்ஸராக விளாசித்தள்ளினார் மலேசியா வாசுதேவன்.

‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில், கோயில் மணி ஓசைதனை கேட்டதாரோ?’, ‘மலர்களே நாதஸ்வரங்கள்’ என்ற பாட்டும் பட்டிதொட்டியெங்கும் பற்றிக்கொண்டது.

’சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் இரண்டே பாடல்கள். ஒன்று கமலுக்கு. இன்னொன்று மலேசியாவுக்கு. ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் ‘வான் மேகங்களே’ பாடலும் ‘நிறம் மாறாத பூக்கள்’ படத்தில் ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’ பாடலும் மலேசியா வாசுதேவனின் குரலை, தனித்துவமாக்கிற்று.

‘கல்யாணராமன்’ படத்தில் ‘காதல் தீபமொன்று’ பாடல் மனசைத் திருடிவிடும். ‘தர்மயுத்தம்’ படத்தில் இரண்டு பாடல்கள் மலேசியாவுக்கு. ‘ஒருதங்கரதத்தில்...’, ‘ஆகாய கங்கை’ என இரண்டு பாடல்களும் தேனும் பாலுமாய் தித்தித்தன.

‘முரட்டுக்காளை’ படத்தில், ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ அடித்த ஹிட்டுக்கு எல்லையே இல்லை. ‘சட்டம் என் கையில்’ படத்தின்  நீளம் காரணமாக ஒரு பாடல் படத்தில் இல்லாமல் போனது. ஆனால் அந்தப் பாடல் நம்மை மயக்கிவிடும். ‘ஆழக்கடலில் தேடிய முத்து’ பாட்டு நினைவிருக்கிறதுதானே!

‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில், ‘கோடை கால காற்றே’ படத்தில் அப்படியொரு பேஸ்வாய்ஸில் பாடியிருப்பார். ‘கோழிகூவுது’ படத்தில் ‘பூவே இளையபூவே’ என்று ஹைபிட்ச்சில் பாடியிருப்பார். ‘கன்னிராசி’ படத்தில் ‘சுகராகமே சுகபோகமே...’ பாடலை சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன் போல் பாடியிருப்பார். ‘ஆளை அசத்தும் மல்லியே மல்லியே...’ என்று டூயட் பாடலில் காதலில் வழியவிட்டிருப்பார்.

‘ஆண்பாவம்’ படத்தில், ‘குயிலே குயிலே பூங்குயிலே’ பாடலை இப்போது டீக்கடைகளில் கேட்டவுடன் அப்படியே நின்று கேட்டு ரசித்துச் செல்பவர்கள் ஏராளம். ‘மண்வாசனை’ படத்தில் நக்கலும் நையாண்டியுமாக ‘அரிசி குத்தும் அக்கா மகளே’ பாடியிருப்பார்.

‘காளி’ படத்தில் ‘அலையாடும் பூங்கொடியே’ பாடல் நமக்குள் அலையடிக்க வைத்துவிடும். ’நண்டு’ படத்தில் ‘அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா’ பாடலைப் பாடிய விதத்தில், இயற்கையை வணங்கவைத்துவிடுவார் மலேசியா வாசுதேவன்.

‘அடுத்தவாரிசு’ படத்தில் இவர் பாடிய ‘ஆசை நூறுவகை’ பாட்டு, எழுந்து, ஆடவைத்துவிடும். ரஜினிக்கு ‘சொல்லி அடிப்பேனடி’, ‘என்னோட ராசி நல்லராசி’ பாடல்கள் ரஜினியே பாடுவது போல் இருந்தது.

கங்கை அமரன் இசையில், பாக்யராஜ் இயக்கத்தில், ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் ‘காதல் வைபோகமே’ பாடல், இன்றைக்கும் குதூகலப்படுத்தும் பாடல்; கொண்டாட்ட மூடுக்குக் கொண்டுவரும் பாடல். ‘என்னுயிர்த்தோழன்’ படத்தில் ‘குயிலுக்குப்பம்’ பாடலும் ‘ஹே ராசாத்தி ராசாத்தி ராசாத்தி’ பாடலும் என ரெண்டே பாடல்கள். ரெண்டுமே மலேசியாவின் ராஜாங்கம்தான்.

விஜயகாந்துக்கு ‘அம்மன்கோவில் கிழக்காலே’ படத்தில் ‘ஒருமூணு முடிச்சால முட்டாளா ஆனேன்’ பாட்டு புலம்பலும் நக்கலும் கலந்துகட்டிய பாட்டு. ‘படிக்காதவன்’ படத்தில், ‘சிவாஜிக்காக ‘ஒருகூட்டுக்கிளியாக, ஒருதோப்புக் குயிலாக’ என்று பாடினார். பிறகு ‘முதல் மரியாதை’யில் எல்லாப் பாடல்களையும் பாடினார். சிவாஜிக்கு டி.எம்.எஸ்.க்கு அடுத்தபடி மலேசியாவின் குரல் செட்டாகிவிட்டதே என்று எல்லோரும் வியந்து கேட்டார்கள்.

இப்படித்தான்.. எந்தப் பாடலைப் பாடினாலும் மலேசியா வாசுதேவனின் குரல், சொக்கவைக்கும்; சுண்டியிழுக்கும். கட்டிப்போடும்; கலாட்டா பண்ணும். குதூகலப்படுத்தும்; கொண்டாடவைக்கும். இத்தனைக்கும் நடுவே, நடிப்பிலும் மிளிர்ந்தார்; மிரட்டினார்.

மலேசியா வாசுதேவனின் ஆயிரக்கணக்கான பாடல்கள் நமக்கு ஆயிரமாயிரம் சிறகுகளைத் தந்து பறக்கடிக்கும். அப்படியொரு மாயமந்திரக்குரல் அவருடையது.

மந்திரக்குரலோன் மலேசியா வாசுதேவனுக்கு இன்று (15.9.19) பிறந்தநாள். இந்தநாளில், இன்றைக்கும் அவரின் குரல், நம் செவியில் இறங்கி, சிந்தனையைத் தொட்டு என்னவோ செய்கின்றன.

இந்த நாளில், மலேசியா வாசுதேவன் பாடல்களில், உங்களுக்குப் பிடித்த பாடல்கள் குறித்து பகிர்ந்துகொள்ளுங்கள். அவரை நினைவுகூர்வோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x