

உணவு ஒவ்வாமை (ஃபுட் பாய்சன்) காரணமாக, நடிகர் கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
'த்ரிஷ்யம்' மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாபநாசம்' படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு கமல் சென்னையில் ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நரம்பு தொடர்பான பிரச்சினை இருந்ததாகவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கமல் தரப்பில் கேட்டபோது, உணவு ஒவ்வாமை (ஃபுட்பாய்சன்) காரணமாக அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும், அவர் விரைவில் 'பாபநாசம்' படத்தின் படப்பிடிப்புக்கு புறப்பட உள்ளார் என்றும் கூறினர்.