

அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் 'வேலையில்லா பட்டதாரி' இந்தி ரீமேக்கிற்கான பணிகளைத் துவங்க திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ்.
வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலா பால், சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான 'வேலையில்லா பட்டதாரி' தமிழகத்தில் பெரும் வரவேற்பு பெற்றது. அனிருத் இசையமைத்து இருந்த இப்படத்தை நடித்து, தயாரித்து இருந்தார் தனுஷ்.
தற்போது தமிழில் 'அனேகன்' மற்றும் இந்தியில் 'ஷமிதாப்' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். நவம்பரில் 'அனேகன்' திரைக்கு வரவிருக்கிறது. 'ஷமிதாப்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
தமிழில் வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, தனக்கு இருக்கும் இந்தி மார்க்கெட்டை கணக்கில் கொண்டு 'வேலையில்லா பட்டதாரி' படத்தை இந்தியில் தயாரிக்க திட்டமிட்டார் தனுஷ். தனுஷ் நாயகனாகவும், மற்ற கதாபாத்திரங்களுக்கு இந்தி நடிகர்கள் நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறார். அனிருத் இசை, வேல்ராஜ் ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் என தமிழ் படக்குழுவே அங்கும் பணியாற்ற திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இதற்கான பணிகள் 2015 ஜூலையில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ்.