முதல்வருடன் அர்னால்டு சந்திப்பு: ஆட்டோகிராப் வாங்கிய சூர்யா

முதல்வருடன் அர்னால்டு சந்திப்பு: ஆட்டோகிராப் வாங்கிய சூர்யா
Updated on
1 min read

‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவை அர்னால்டு சந்தித்து பேசினார்.

‘ஐ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சென்னை தலைமை செயலகத்தில் நேற்று பிற்பகல் 2.45 மணிக்கு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். இதுகுறித்து நடிகர் அர்னால்டு தனது டிவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தேன். அப்போது அவர் தமிழக அரசின் சாதனைகள் குறித்தும், எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்தும் என்னிடம் விவரித்தார். நடிப்புத்துறைக்குள் இருந்து கவர்னராக அரசியல் துறைக் குள்ளும் நுழைந்த அனுபவம் இருந்ததால், தமிழக முதல்வருடன் உரையாடியது எனக்கு சாதகமான அனுபவமாக இருந்தது’’ இவ்வாறு கூறியுள்ளார்.

அர்னால்டு - சூர்யா சந்திப்பு:

ஹாங்காங்கில் இருந்து தனி விமானம் மூலம் அதிகாலை 3 மணிக்கு சென்னை வந்தடைந்தார் அர்னால்ட். உடனடியாக அவர் தங்குவதற்காக ஏற்பாடு செய் திருந்த சென்னை லீலா பேலஸ் விடுதிக்குப் புறப்பட்டார். அந்த விடுதியில் உள்ள ஜிம்மில்தான் நடிகர் சூர்யா தினசரி உடற் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

எதேச்சையாக அந்த நேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதற் காக நடிகர் அர்னால்டு வந்துள்ளார். அவரிடம் நடிகர் சூர்யாவை படத் தயாரிப்பாளர் ஆஸ்கார் வி.ரவிச்சந்திரனின் தம்பி ரமேஷ் பாபு அறிமுகப் படுத்தினார். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட் டனர். உடலை கட்டுமஸ்தாக வைத்துக் கொள்வது தொடர்பான சில குறிப்புகளை சூர்யாவுக்கு அர்னால்டு கூறியதாக தெரிகிறது. அதன்பின் நடிகர் சூர்யா தனது வீட்டிலிருந்து கொண்டுவரச் சொன்ன அர்னால்டு எழுதிய ‘அர்னால்டு பாடிபில்டிங் ஃபார் மென் ’ புத்தகத்தை அவரிடம் காட்டி ‘தனக்கு மிகவும் பிடித்த புத்தகம்’ என்று கூறி நடிகர் சூர்யா கையெழுத்து வாங்கிக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in