

அஹமத் இயக்கத்தில் 'இதயம் முரளி', திருக்குமரன் இயக்கத்தில் 'கெத்து' என இரு படங்களில் நடிக்கவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
ராஜேஷின் உதவி இயக்குநர் ஜெகதீஷ் இயக்கத்தில் 'நண்பேன்டா' படத்தில் நடித்து, தயாரித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். நயன்தாரா, சந்தான, ஷெரீன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து 'என்றென்றும் புன்னகை' இயக்குநர் அஹமத் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடித்து தயாரிக்க இருக்கிறார். 'இதயம் முரளி' என பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தில் ஹன்சிகா நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். சந்தானத்துடன் இணைந்து காமெடி செய்து வந்த உதயநிதி இப்படத்தில், தம்பி ராமையாவோடு கூட்டணி அமைத்து இருக்கிறார். அது போலவே இசையமைப்பாளராக இமானுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார்.
'மான் கராத்தே' இயக்குநர் திருக்குமரன் இயக்கவிருக்கும் படத்தையும் நடித்து தயாரிக்க இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இப்படத்திற்கு 'கெத்து' என தலைப்பிட்டு இருக்கிறார்கள். இப்படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்பது உறுதியாகவில்லை. ஏமி ஜாக்சன் நாயகியாக ஒப்பந்தமாக இருக்கிறார் என்று செய்திகள் பரவி வருகின்றன.
இன்னும் படப்பிடிப்பு உள்ளிட்ட விஷயங்களே முடிவு பெறாத நிலையில், இணையத்தில் 'கெத்து' போஸ்டர் டிசைன்கள் வெளியாகின. "அந்த டிசைன் ரசிகர்கள் உருவாக்கியது, உண்மையான போஸ்டர் டிசைன் அல்ல" என்று உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.