

மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு நடிகை ஹன்சிகா நிவாரண உதவிகளை வழங்கியிருக்கிறார்.
தமிழ் திரையுலகின் தற்போதைய முன்னணி நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா. 'அரண்மனை' படத்தைத் தொடர்ந்து, விஷாலுடன் 'ஆம்பள', விஜய் - சிம்புதேவன் இணையும் படம், உதயநிதியுடன் 'இதயம் முரளி' உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் 'ஆம்பள' படத்தின் படப்பிடிப்பில் ஹன்சிகா கலந்துகொண்டு நடித்து வருகிறார்.
இந்த நிலையில், மழை - வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மக்களுக்காக தன்னால் இயன்ற உதவிகளை செய்தியிருக்கிறார் ஹன்சிகா. காஷ்மீர் மக்களுக்காக நிவாரண உதவிகளைத் திரட்டி வந்த மும்பையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் தன்னுடைய பங்களிப்பை அவர் கொடுத்திருக்கிறார்.
சில லட்ச ரூபாய் நிதி உதவியை அளித்திருக்கும் அவர், அம்மா, அண்ணன் மற்றும் தன்னிடம் இருந்த குளிர்ப் பிரதேசத்தில் உபயோகிக்கும் ஆடைகள் அனைத்தையும் வழங்கியிருக்கிறார்.
ஏஎல்எஸ் எனப்படும் நரம்புச் சிதைவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அ துதொடர்பான அறக்கட்டளைக்கு நிதி திரட்டவும் பிரபலப்படுத்தப்பட்ட பனிக்கட்டி நீர் குளியல் சவாலை (ஐஸ் பக்கெட் சேலஞ்ச்) தென்னந்திய திரையுலக பிரபலங்களில் முதலில் தொடங்கியது ஹன்சிகா தான். அவரைத் தொடர்ந்த பலரும் பின்பற்றினார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, காஷ்மீர் மக்களுக்கு உதவ வேண்டும் என்று வீடியோ பதிவின் மூலம் மலையாள நடிகர் மோகன்லால் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.