

ஓரின ஈர்ப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘என் மகன் மகிழ்வன்’, அமெரிக்க திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது.
ஆண் ஓரின ஈர்ப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ‘என் மகன் மகிழ்வன்’. லோகேஷ் குமார் இயக்கியுள்ள இந்தப் படம், ஆண் ஓரின ஈர்ப்பு பற்றி தமிழில் எடுக்கப்பட்டுள்ள முதல் படமாகும். இந்தப் படத்தில் அனுபமா, குமார், அபிஷேக் ஜோசப், அஸ்வின்ஜித், கிஷோர், ஜெயப்பிரகாஷ் என பலர் நடித்துள்ளனர். ரத்தின குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, சாந்தன் இசையமைத்துள்ளார்.
‘என் மகன் மகிழ்வன்’, ஏற்கெனவே மெல்போர்னில் நடைபெற்ற இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல், நியூயார்க்கில் நடைபெற்ற நியூபெஸ்ட் எல்.ஜி.பி.டி. ஃபிலிம் ஃபெஸ்டிவல், கல்கத்தா இண்டர்நேஷனல் எல்.ஜி.பி.டி. ஃபிலிம் மற்றும் வீடியோ ஃபெஸ்டிவல், கோவா ஃபிலிம் பஜார், சென்னை சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றில் திரையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க மாகாணமான பிலடெல்பியாவில் நடைபெறும் ‘க்யூபிலிக்ஸ் பிலடெல்பியா எல்.ஜி.பி.டி. ஃபிலிம் ஃபெஸ்டிவலில்’ திரையிடப்பட இருக்கிறது. மார்ச் மாதம் 20ஆம் தேதி., கன்னெல்லி ஆடிட்டோரியத்தில் திரையிடப்படுகிறது.
கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஓடக்கூடிய இந்தப் படத்திற்கு, தமிழ் சினிமா சென்சார் போர்டு அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த வருட மத்தியில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.