தடையை மீறி விழா: ஞானவேல் ராஜாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட்
தடையை மீறி விழா நடத்தியதால், ஞானவேல் ராஜாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ‘ரெட்’ போட்டுள்ளது.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் மூலம் படங்களைத் தயாரித்து வருகிறார் கே.இ.ஞானவேல் ராஜா. இவர் தற்போது தயாரித்துவரும் படங்களில் ஒன்று ‘நோட்டா’.
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடித்த விஜய் தேவரகொண்டா இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ ஹீரோயின் மெஹ்ரீன், விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ‘நோட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.
பத்திரிகையாளர் சந்திப்பு, இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட எந்த சினிமா நிகழ்ச்சியையும் நடத்தக்கூடாது என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில், தடையை மீறி ‘நோட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியதால் ஞானவேல் ராஜா மீது ’ரெட்’ போட்டுள்ளது தயாரிப்பாளர் சங்கம்.
தான் அப்படி நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்டு தயாரிப்பாளர் சங்கத்திடம் கடிதம் கொடுத்துள்ளாராம் ஞானவேல் ராஜா. அதன்மீதான நடவடிக்கை விரைவில் தெரியவரும் என்கிறார்கள்.
