

7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிப்பதாகத் தெரிவித்துள்ளார் மம்தா மோகன்தாஸ்.
‘சிவப்பதிகாரம்’ படத்தில் விஷால் ஜோடியாக நடித்தவர் மம்தா மோகன்தாஸ். 2006ஆம் ஆண்டு ரிலீஸான இந்தப் படத்தை, கரு.பழனியப்பன் இயக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து, ‘குரு என் ஆளு’ மற்றும் ‘தடையறத் தாக்க’ ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததால், மலையாளப் படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தினார். அத்துடன், தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், 7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிப்பதாகத் தெரிவித்துள்ளார் மம்தா மோகன்தாஸ். பிரபுதேவாவுடன் இணைந்து அவர் நடிக்கும் ‘ஊமை விழிகள்’ படத்தின் ஷூட்டிங், தற்போது ஊட்டியில் நடைபெற்று வருகிறது. விஜயகாந்த், அருண் பாண்டியன், சந்திரசேகர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஸ்ரீவித்யா, சரிதா என ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் 1986ஆம் ஆண்டு ரிலீஸான க்ரைம் த்ரில்லர் படம் ‘ஊமை விழிகள்’. அதே பெயரில் இந்தப் படம் தயாராகிறது. மேலும், ரா.பார்த்திபன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ‘உள்ளே வெளியே 2’ படத்திலும் கமிட்டாகியுள்ளார் மம்தா மோகன்தாஸ்.