

‘நெடுஞ்சாலை’ படத்தில் காமெடி கலந்த வில்லன் வேடத்தில் நடித்து, அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறார் சலீம் குமார். மலையாள காமெடி நடிகரான இவர், அங்கு சிறந்த குணச்சித்திர நடிகராகவும் புகழ்பெற்றவர். கேரள அரசிடம் இருந்து ‘சிறந்த குணச்சித்திர நடிகர்’, ‘சிறந்த நடிகர்’, ‘சிறந்த நகைச்சுவை நடிகர்’ ஆகிய மூன்று விருதுகளையும் பெற்ற ஒரே நடிகர் இவர்தான்.
பேட்டிக்காக நாம் சந்தித்தபோது தமிழ் தெரியாவிட்டாலும், தமிழில் பேச அவர் மெனக்கிட்டதற்கு அவருக்கு ஒரு பூங்கொத்து. அவரிடம் உரையாடியதில் இருந்து...
‘நெடுஞ்சாலை’ வாய்ப்பு எப்படி அமைந்தது?
எத்தனையோ நடிகர்கள் இருக்கிறப்போ, நான் நடிச்சா நல்லாயிருக்கும்னு என்னை நடிக்க வைத்த இயக்குநர் கிருஷ்ணாவிற்குதான் நன்றி சொல்லணும். மலையாளத்தில் பிஸியாக இருந்த நான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணம் இதன் கதை.
இந்த படத்துக்கு நான் ஒப்புக்கொண்ட நேரத்தில் ஒரு மலையாள புரொடியூசர் ‘நெடுஞ்சாலை’க்கு ஒதுக்கின தேதிக்காக அட்வான்ஸ் கொடுக்க வந்தாரு. அவரிடம் மன்னிப்பு கேட்டு, கிருஷ்ணா படத்தை ஒப்புக்கொண்டேன். ஏன்னா அவர் இயக்கிய ‘சில்லுனு ஒரு காதல்’ எனக்கு பிடிச்ச படம். தமிழில் என்னை அறிமுகப்படுத்திய குரு கிருஷ்ணா என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்.
மலையாளத்துல நிறைய படங்கள் பண்ணிட்டு இருக்கீங்க. ஆனா தமிழ் படங்கள் ரொம்ப கம்மியா பண்றீங்களே.. என்ன காரணம்?
கேரளாவிலும் ரொம்ப கம்மியாதான் படங்கள் பண்றேன். 270 படங்கள் கிட்ட பண்ணியாச்சு.இதில் 5 அல்லது 6 படங்கள்தான் எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்தது. அதனால் தான் இப்போது நல்ல இயக்குநர், நல்ல கதை அமைஞ்சா மட்டும் நடிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன். இப்போ சமீபமா ஒரு படம் கூட தயாரிச்சேன். பெரியளவிற்கு ஹிட் இல்லாவிட்டாலும் நன்றாக ஓடியது.
‘மரியான்’தானே தமிழ்ல உங்களோட முதல் படம்?
நான் தமிழில் முதலில் ஒப்புக் கொண்டு, நடித்த படம் ‘நெடுஞ்சாலை’ தான். ஆனா, ‘மரியான்’முதல்ல ரிலீஸாச்சு.
தமிழ்ல நடிக்கிறப்போ மொழி ஒரு பிரச்சினையா இல்லயா?
கஷ்டம்தான். காமெடி அல்லது நீளமான வசனம் பேசுறப்போ கொஞ்சம் கஷ்டமா இருக்கும். மொழிகளுக்கு அப்பாற்பட்டதுதானே சினிமா. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை நான் சுகமாகத் தான் கருதுகிறேன்.
நீங்க ஒரு நாடக நடிகர், மிமிக்ரி எல் லாம் பண்ணுவீங்க. சினிமாவிற்கு வருவ தற்கு எது காரணமாக அமைந்தது?
மிமிக்ரி, நாடகம் இது எல்லாம் நான் சினிமாவிற்கு வருவதற்கு ஒரு காரணம் அல்ல. மலையாளத்துல நிறைய மிமிக்ரி நடிகர்கள் இருக்காங்க. நிறையப் பேர் சினிமாவிற்கு வந்தாலும், அதில் நிலைத்து நின்றது 5 அல்லது 6 பேர்தான். மிமிக்ரி, நாடகம், சினிமா இப்படி எதை எடுத்துக்கிட்டாலும் அதில் நாம் நிரூபித்தாக வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே அடுத்தடுத்து வாய்ப்புகள் அமையும்.
நாடகம், மிமிக்ரி, சினிமா என்ன வித்தியாசம்?
நாடகம், மிமிக்ரியில் ரசிகர்களோட பேச முடியும். ரிசல்ட் என்ன என்பது உடனே தெரியும். ஆனால் சினிமாவைப் பொறுத்தவரை அப்படி கிடையாது. ஒரு படம் திரைக்கு வந்த பிறகுதான் ரசிகர்களின் ரிசல்ட் தெரியும். மற்றபடி ரெண்டுக்குமே ஒரே உழைப்புதான் தேவை.
தமிழ்நாட்டு நடிகர்களுக்கு கேரளா வில் இருக்கும் ரசிகர் மன்றம்போல, கேரளா நடிகர்களுக்கு தமிழ்நாட்டில் இல்லயே. இதற்கு என்ன காரணம்?
தென்னந்தியா அளவில் தமிழ் மொழியை சிறப்பான மொழியாகவே கருதுகிறார்கள். மற்ற ஊர்களில் தமிழ் படங்களுக்கு நல்ல இடம் இருக்கு.. தமிழ் மொழியோட வேர் எல்லா இடங்களிலும் இருக்கிறது. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எம்.என்.நம்பியார், நாகேஷ் போன்றவர்களுக்கு எல்லாம் கூட கேரளாவில் ரசிகர்கள் இருந்தார்கள். என்ன, இந்த காலம்போல அப்போது ப்ளக்ஸ் போர்டுகள் இல்லை அவ்வளவு தான். அவர்க ளோட மனசுதான் ப்ளக்ஸ் போர்டு எல்லாம்.
ஒரு படம் ஒப்புக் கொள்ளும்போது எதற்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள்? கதைக்கா, இயக்குநருக்கா?
கதைக்கும் இயக்குநருக்கும். ஒரு நல்ல கதை மோசமான இயக்குநரிடம், மோசமான கதை ஒரு நல்ல இயக்குநரிடம் கிடைத்தால் வித்தியாசம் இருக்குமே.
‘ஆதாமின்டே மகன் அபு' படத்தோட இயக்குநர் புதுசுதான். யார்கிட்டயும் அவர் உதவியாளரா இருந்ததில்லை. கதை சொன்னார் பிடித்திருந்தது. அந்த படம் இந்திய அளவிற்கு பேசப்பட்டதே. நிறைய பாராட்டுகள், தேசிய விருது எல்லாம் கிடைத்தது. யாருக்குமே தெரியாது அந்த இயக்குநர் இந்த மாதிரி இயக்குவார் என்று. அந்த படத்தோட விநியோகஸ்தர் நான்தான். அது ஒரு தோல்வி படம்.