ஐ-டியூன்ஸில் ஐ-யை முந்தியது கத்தி: அனிருத்தின் 6-வது படமும் டாப்!

ஐ-டியூன்ஸில் ஐ-யை முந்தியது கத்தி: அனிருத்தின் 6-வது படமும் டாப்!
Updated on
1 min read

அனிருத் இசையில் வெளியாகியுள்ள 'கத்தி' திரைப்படத்தின் பாடல்கள், இந்திய அளவில் ஐ-டியூன்ஸ் தளத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன் அனிருத் இசையில் வெளிவந்த 5 திரைப்படங்களின் இசையும், வெளிவந்த நாளில் ஐ-டியூன்ஸில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

'3' திரைப்படம் மூலம் அறிமுகமான அனிருத், அத்திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் யூடியூபில் ஹிட் ஆனதால், உலகளவில் பிரபலமானார். தொடர்ந்து அவர் மீதிருந்து எதிர்பார்ப்பை எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, மான் கராத்தே, வேலையில்லா பட்டதாரி அகிய திரைப்படங்களின் பாடல்கள் மூலம் வெகுவாக பூர்த்தி செய்தார்.

அனிருத் ரசிகர்கள் பலரும் இன்று சமூக வலைதளங்களில் அவரை தொடர்ந்து வருகின்றனர். அவரது பாடல்களை சிலாகித்து பேசியும், பகிர்ந்தும் வருகின்றனர். விஜய் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் 'கத்தி' திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்தே பாடல்கள் குறித்து ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவியது.

சில நாட்களுக்கு முன், 'கத்தி' திரைப்படத்தில் இடம்பெறும் 'லெட்ஸ் டேக் ஏ செல்ஃபி புள்ள' பாடல் கள்ளத்தனமாக வெளியானது. இது படக்குழுவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் பாடல் ரசிகர்களிடயே வரவேற்பை பெற்றது.

இன்று கத்தி திரைப்படத்தின் பாடல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியான சில மணி நேரங்களிலேயே, பாடல்களை முறையாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள உலகளவில் பலர் பயன்படுத்து ஐ-டியூன்ஸ் இணையதளத்தில், கத்தி பாடல்கள், இந்திய அளவில் முதலிடத்தை பிடித்தன. சில நாட்களுக்கு முன் வெளியான ஏ.ஆர் ரகுமானின் 'ஐ' படப் பாடல்கள், இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

இதற்கு முன் அனிருத் இசையமைத்த 5 திரைப்பட பாடல்களுமே ஐ-டியூன்ஸ் தளத்தில், வெளியான அன்று முதலிடத்தை பிடித்தது. தொடர்ந்து ஆறாவது முறையாக முதலிடம் பிடித்தற்கு ரசிகர்களுக்கும், கத்தி வாய்ப்பிற்காக ஏ.ஆர். முருகதாஸுக்கும், நடிகர் விஜய்க்கும் தனது ட்விட்டர் பக்கத்தில், அனிருத் நன்றி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in