

தனுஷ் நடித்துள்ள வடசென்னை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.
தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வடசென்னை. இந்தப் படத்தை, மூன்று பாகங்களாக இயக்கத் திட்டமிட்டுள்ள வெற்றிமாறன், தற்போது முதல் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.
வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
அன்பு என்ற கேரக்டரில் கேரம் விளையாட்டு வீரராக இந்தப் படத்தில் நடித்துள்ளார் தனுஷ். அந்த கதாபாத்திரத்தின் 25 வருட வாழ்க்கைதான் இந்தப்படம். வடசென்னை தான் படத்தின் கதைக்களம். அந்த மக்களின் நிலம் பறிக்கப்பட்டு, வாழ்வாதாரம் மறுக்கப்பட்டு நெருக்கடியில் தள்ளப்படும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் படம்.
ஹீரோ, வில்லன் என தனித்தனியாக யாரும் இல்லாமல், எல்லாருக்கும் எல்லா குணமும் இருக்கும்படி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் வெற்றிமாறன். ஜூன் மாதம் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.