

இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள், அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாட்டின் போக்கைத் தீர்மானிக்கக் கூடியது என்று தயாரிப்பாளர் சி.வி.குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
மக்களவைக்கு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் வேலூர் தொகுதியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டு, மீதியுள்ள 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. நாடு முழுவதும் 67.11 சதவீத வாக்குகள் பதிவானது. 90.99 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.
இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும் முக்கியப் போட்டி நிலவி வருகிறது. இந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடு முழுவதும் இன்று (மே 23) காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது.
இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது ட்விட்டர் பதிவில், “நாளைய (இன்றைய) தேர்தல் முடிவுகள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கல்ல, அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு நம் நாட்டின் போக்கைத் தீர்மானிக்கக் கூடியவை" என்று தெரிவித்துள்ளார்.