

தன்னுடைய படத்துக்கு ‘Mr. லோக்கல்’ என எதனால் தலைப்பு வைக்கப்பட்டது என்பதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘Mr. லோக்கல்’. எம்.ராஜேஷ் இயக்கியுள்ள இந்தப் படம், முழுவதும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்க, ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம், மே 17-ம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்துக்கு ‘Mr. லோக்கல்’ என்று பெயர் வைத்தது ஏன்? என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள சிவகார்த்திகேயன், “இப்போது ஒரு படத்தின் தலைப்பு, முதல் பார்வை, டீஸர், ட்ரெய்லர் எல்லாவற்றையும் வைத்துதான், அது மக்களை எவ்வளவு தூரம் சென்றடைகிறது என்பது இருக்கிறது.
படத்தின் தலைப்பு என்பது, ஒரு பிராண்டை உருவாக்குகிறது. அதனால், நிறைய மக்களைச் சென்றடைய தலைப்புகள் எளிமையாக, புரியும்படி, கமர்ஷியலாக இருக்க வேண்டும். ‘மனம் கொத்திப் பறவை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ போல நீளமான தலைப்புகளை இனி என் படங்களுக்கு வைக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
‘Mr. லோக்கல்’ படத்தைத் தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். அதற்கடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.