

ஜுன் 2-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள இளையராஜா இசைக் கச்சேரிக்கான ஒத்திகையில் இளையராஜா - எஸ்.பி.பி. இருவரும் ஈடுபட்டுள்ளனர்.
ராயல்டி பிரச்சினை தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் எஸ்.பி.பி.க்கும் இடையே பிரச்சினை வெடித்தது. இது, இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு நடந்த இளையராஜாவின் எந்தவொரு இசை நிகழ்ச்சியிலும் எஸ்.பி.பி. கலந்து கொள்ளவில்லை. ஆனால், தான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் அனைத்திலுமே இளையராஜாவைப் பற்றி உயர்வாகப் பேசிவந்தார் எஸ்.பி.பி.
இந்நிலையில், சமீபமாக இளையராஜாவின் 75-வது பிறந்த நாள் விழா, படுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது இசையமைப்பாளர்கள் யூனியன் சார்பில் ஜூன் 2-ம் தேதி ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் இளையராஜாவின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் எஸ்.பி.பி, யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, மனோ உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
ராயல்டி பிரச்சினைக்குப் பிறகு இளையராஜா - எஸ்.பி.பி. இருவரும் ஒரே மேடையில் தோன்றும் நிகழ்வாக இது அமையவுள்ளது. ஆகையால், இசை ரசிகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். இதன் ஒத்திகைக்காக இன்று (மே 27) இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு எஸ்.பி.பி. வந்துள்ளார். இருவருமே தங்களுடைய நட்பை மீண்டும் புதுப்பித்துக் கொண்டுள்ளனர்.
இருவரும் கட்டிப்பிடித்துக் கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து, 'The Duo is Back' எனப் பதிவிட்டு வருகின்றனர்.