ஜெயில் படத்துக்கான பின்னணி இசை: ஜீ.வி.பிரகாஷுக்கு வசந்தபாலன் புகழாரம்

ஜெயில் படத்துக்கான பின்னணி இசை: ஜீ.வி.பிரகாஷுக்கு வசந்தபாலன் புகழாரம்
Updated on
1 min read

'ஜெயில்' படத்துக்கான பின்னணி இசை தொடர்பாக ஜீ.வி.பிரகாஷுக்கு தன் ஃபேஸ்புக் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.

வசந்தபாலன் இயக்கிய 'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜீ.வி.பிரகாஷ். தற்போது நாயகனாகவும் வசந்தபாலன் இயக்கத்தில் நடித்துள்ளார்.

'ஜெயில்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ராதிகா சரத்குமார், 'பசங்க' பாண்டி, அபர்ணதி, ஜெனிஃபர், மணிமேகலை, பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்துமே முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாயகனாக நடித்திருப்பது மட்டுமன்றி, இப்படத்துக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார் ஜீ.வி.பிரகாஷ்.

இந்நிலையில், ஜீ.வி.பிரகாஷின் பின்னணி இசையை வெகுவாகப் பாராட்டியுள்ளார் வசந்தபாலன். இது தொடர்பாக அவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

'ஜெயில்' திரைப்படத்தின் கடைசி ரீலுக்கான பின்னணி இசை எழுதும் வேலை இப்போதுதான் முடிந்தது. இப்போதுதான் வீடு திரும்பி நீர்மையின் கைகளில் என்னை நான் ஒப்படைத்துவிட்டு அமர்கிறேன். ஜீ.வி.யின் விரல்களில் வழிந்த இசை, என் ஆழ்மன உணர்ச்சியை ஆழம் பார்த்தது. ரசிகனையும் விடாது.

தவிர்க்க முடியாத விசையொன்றால் ஈர்க்கப்படுபவனைப் போல், இசையின் சுழற்சியில் மனம் முன்னும் பின்னும் பம்பரமாய் சுழன்றாடியது. காட்சியும் இசையும் ஒன்றையொன்று புதுமணத்தம்பதி போல கைகோத்துக் கொண்டு என் முன் உலாவர, கண்ணீர் என்னையறியாமல் விழியில் வழிந்தது. மிக அழுத்தமான காட்சிப் பிம்பம், அந்தப் பிம்பத்தின் உணர்ச்சி இருமடங்காக ஆக்கும் இசை.

என் இசையின் மொழி ஜீ.வி.க்கு எளியதாகப் புரியும். இப்போது க்ளைமாக்ஸ் காட்சியைப் பார்க்கையில், மிக உயர்ந்த இடத்தில் இருந்தது. பின்னணி இசைக் கோர்ப்பு வேலைகள் பம்பாயில் முடிவுற்று, முழுப்படத்தைப் பார்க்கும் நாளை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன். மனதால் ஜீ.வி.யை இறுக அணைத்துக் கொண்டேன்.

இந்த முறை, அர்ஜுனா உன் இலக்கு தப்பாது என்று மனம் சொன்னது. காலதேவன் துணையிருக்கட்டும். இசை இருபுறங்களிலுமாக மாறி மாறி ஒலித்து, உளமயக்கை உருவாக்கியது. மனம் கொந்தளிப்பு அடங்கியது. ‘ஜெயில்’ தன்னுடலையே சிறகாக்கிக்கொண்டு பறக்கும் நாளுக்காய்க் காத்திருக்கிறது. ‘ஜெயில்’, தன் விடுதலையை தானே தேடிக்கொள்ளும்.

இவ்வாறு வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in