

'தர்பார்' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க சுனில் ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'தர்பார்'. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுற்று, 2-ம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ஆயத்தமாகி வருகிறது. 2-ம் கட்ட படப்பிடிப்பு மே 29-ம் தேதி தொடங்கும் என தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.
இந்நிலையில், ரஜினிக்கு வில்லனாக சுனில் ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் தான் படத்தின் பிரதான வில்லனாக நடிக்கவுள்ளார். இவரது மகனாகவே ப்ரதீக் பப்பார் நடிக்கவுள்ளார். சுனில் ஷெட்டி சம்பந்தப்பட்ட காட்சிகளை 2-ம் கட்ட படப்பிடிப்பில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
'தர்பார்' படத்துக்கு முன்பாக மறைந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் ஜீவா இயக்கிய '12 பி' படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சுனில் ஷெட்டி. அவர் நடிப்பில் உருவாகும் 2-வது தமிழ் படமாக 'தர்பார்' அமைந்திருக்கிறது
காவல்துறையாக அதிகாரியாக ரஜினி நடிக்கும் இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகவும், அனிருத் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.
அனைத்துப் பணிகளையும் முடித்து, 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று படப்பூஜை அன்றே 'தர்பார்' படக்குழு அறிவித்துள்ளது நினைவுக்கூரத்தக்கது.