

சினிமா வேண்டாம், ஊருக்குப் போகலாம் என்றபோது வந்த வாய்ப்பு குறித்து 'கொரில்லா' இசை வெளியீட்டு விழாவில் ராகுல் தாத்தா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே, யோகி பாபு, சதீஷ், ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கொரில்லா'. இப்படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்றும் நடித்துள்ள. ஜூன் 21-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று (மே 24) சென்னையில் நடைபெற்றது.
தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, இயக்குநர்கள் ராஜுமுருகன், ஆர்.கண்ணன், விஜய் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் கலந்துகொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இவ்விழாவில் கலந்துகொண்டு ராகுல் தாத்தா பேசியபோது, “இப்படத்தில் ஒரு வங்கியில் பணிபுரியும் செக்யூரிட்டியாக நடித்துள்ளேன். இதில் நடித்த நாயகன், நாயகி என அனைவருமே குரங்கிடம் அடிவாங்கியுள்ளனர். அடிவாங்காதவர்களே கிடையாது. மேலும், அனைவரையுமே கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும். குரங்கு முத்தம் கொடுக்கும்போது தவிர்த்தால், உடனே அறைந்துவிடும். அதுவொரு குழந்தை மாதிரி, நாம் ஏதாவது செய்தால் உடனே அடித்துவிடும்.
இப்படத்தின் இயக்குநர் டான் சாண்டி, எனக்குத் தெய்வம் மாதிரி. எனக்காகவே இந்த கேரக்டரை உருவாக்கியிருக்கார். தாய்லாந்து ஷுட்டிங்கிற்கு என்னிடம் பாஸ்போர்ட் இல்லை, வரமுடியாது எனச் சொல்லிவிட்டேன். ஆனால், நீங்கள் வந்தால் மட்டுமே ஷுட்டிங் என்று அழைத்துச் சென்றார்கள். 'நானும் ரவுடிதான்' படத்தில் எப்படி என் கேரக்டர் பேசப்பட்டதோ, அதுபோல் இப்படத்தின் கேரக்டரும் பேசப்படும்.
தாய்லாந்தில் எனக்கு என்ன வசதி வேண்டுமோ, செய்து கொடுத்தனர். காலம் முழுக்க அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன். என்னோடு ஒரு மேனேஜரைத் தங்கவைத்துவிட்டனர். ‘அவரைத் தனியாக விட்டுவிடாதீர்கள், அவர் எங்கேயவாது மசாஜுக்குப் போய்விடுவார். பக்கத்திலேயே பார் வேறு இருக்கிறது’ என்றார்கள்.
இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும். பல ஆண்டுகளுக்கு முன்புதான் கொரில்லாவை வைத்துப் படம் பண்ணார்கள். இந்தக் காலத்தில் இப்படம் பண்ணுவது பெரிய விஷயம். கொரில்லா குரங்குக்கு ஒருநாள் சம்பளமே 2 லட்சம். அதனுடனே இருக்கும் பயிற்சியாளருக்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம். அப்படியென்றால் எவ்வளவு செலவு செய்திருப்பார்கள் பாருங்கள்.
ஒரு படத்தை அடுத்து என்ன, அடுத்து என்ன என்று கொண்டுசெல்ல வேண்டும். அப்படியிருந்தாலே படம் வெற்றிதான். இயக்குநர் டான் சார் அப்படித்தான் இப்படத்தைக் கொண்டு சென்றுள்ளார். அவர் இயக்கும் அனைத்துப் படங்களிலும் நான் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அனைத்து மொழிகளிலும் இப்படம் சக்சஸ்தான். இயக்குநர் எங்கேயோ போகப் போகிறார். அதேபோல் நானும் எங்கேயோ போகப் போகிறேன்.
நான் சினிமாவுக்கு வந்து 55 ஆண்டுகளாகிறது. எம்.ஜி.ஆர். படம், சிவாஜி படம் பண்ணியிருக்கேன். நமக்கு சினிமா ஒத்துவராது, ஊருக்கே போய்விடலாம் என்று சாமான்களை எல்லாம் கட்டிவைத்தார் என் பொண்டாட்டி. அப்போதுதான் தனுஷ் கம்பெனியிலிருந்து 'மாரி' படத்துக்கு அழைப்பு வந்தது. 'நானும் ரவுடிதான்' படத்துக்கு தனுஷ்தான் தயாரிப்பாளர் என்பதால், அதிலும் வாய்ப்பு கொடுத்தனர்.
அந்த இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு ஒருவேளை சோறு போட கூட என்னிடம் வருமானம் கிடையாது. எத்தனையோ இயக்குநர்களுக்கு சாப்பாடு பரிமாறியிருக்கேன், படத்தில் ஒரு சீனோ, 2 சீனோ கொடுப்பார்கள். 'மாரி' படத்தின் போட்டோ ஷுட் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, 45 நாட்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அவரை வைத்துதான் கதையே பண்ணியிருக்கேன் என்று சொன்னார்” என்று பேசினார்.