

இந்திய அளவில் உள்ள வசூல் மட்டும் ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளதால், 'காஞ்சனா 3' படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.
ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் 'காஞ்சனா 3'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இப்படத்தில் கோவைசரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, வேதிகா, ஓவியா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஏப்ரல் 19-ம் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விமர்சன ரீதியாக எதிர்வினைகளைச் சந்தித்து வந்தாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் வெளியான 10 நாட்களில் உலக அளவில் 130 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது, இந்திய அளவில் மட்டும் மொத்த வசூல் 100 கோடியைத் தாண்டியுள்ளது. தமிழகத்தில் மொத்த வசூல் 60 கோடியைத் தாண்டிவிட்டதாக முன்னணி விநியோகஸ்தர் தெரிவித்தார். மேலும், தெலுங்கிலும் 2 வாரங்களாக நல்ல வசூல் செய்து வருவதால் ஒட்டுமொத்தமாக 100 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.
இப்படத்தில் முதலீடு செய்த தமிழ் மற்றும் தெலுங்கு விநியோகஸ்தர்கள் அனைவருக்குமே நல்ல லாபம் கிடைத்து பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழகத்தில் பல முன்னணி நடிகர்களுடைய படங்களின் மொத்த வசூலையும், 'காஞ்சனா 3' முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 'காஞ்சனா' படத்தின் இந்தி ரீமேக்கான 'லட்சுமி பாம்' படத்தை இயக்கி வருகிறார். அக்ஷய் குமார் நடித்து வரும் இப்படத்தை முடித்துவிட்டு, தமிழில் 'காஞ்சனா 4' இயக்கவுள்ளார். இதையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்க முன்வந்துள்ளது.