

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'அசுரன்' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி 'வடசென்னை 2' படத்துக்கு முன்பாக 'அசுரன்' என்ற படத்தில் இணைந்து பணிபுரிந்து வருகிறது. இப்படத்தை தாணு தயாரித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கப்பட்டது.
ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்கலாம் என்று திட்டமிட்டே தொடங்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு இடையே நிறுத்தப்பட்டது. துரை.செந்தில்குமார் இயக்கத்தில் உருவான படத்தில் கவனம் செலுத்த தொடங்கினார் தனுஷ். இதனால், மீண்டும் 'அசுரன்' படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பதே தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், 'அசுரன்' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தனுஷ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இம்முறை 40 நாட்கள் இடைவெளியின்றி படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. இதில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
மஞ்சு வாரியர், இயக்குநர் பாலாஜி சக்திவேல், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.