

‘குயின்’ படத்தைப் பார்த்து, கங்கணாவின் நடிப்பில் இருந்து என்னால் வெளியே வரமுடியவில்லை என காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கங்கணா ரணாவத் நடிப்பில் வெளியான இந்திப் படம் ‘குயின்’. 2014-ம் ஆண்டு வெளியான இந்தப் படம், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பாக்ஸ் ஆபீஸில் 10 மடங்கு வசூலித்து சாதனை படைத்தது.
எனவே, இந்தப் படத்தை 4 தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்துள்ளனர். தமிழில் காஜல் அகர்வால், கன்னடத்தில் பரூல் யாதவ், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா மோகன் என 4 மொழிகளிலும் 4 நடிகைகள் கங்கணா கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற பெயரில் இந்தப் படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு காஜல் அகர்வால் பேட்டியளித்தார்.
அதில், “ரசிகர்களைவிட, கங்கணாவின் நடிப்பிலிருந்து என்னால் வெளியே வரமுடியவில்லை. கண்ணை மூடி எந்தக் காட்சியை யோசித்தாலும், அவர் எப்படி நடித்தார் என்பது நினைவில் வரும். அந்தக் கட்டத்தைத் தாண்ட வேண்டியிருந்தது.
‘குயின்’ படத்தில் இருக்கும் உணர்வுகள் பொதுவானவை. ஒரு பெண் கைவிடப்படுகிறாள், மனமுடைகிறாள், மன அழுத்தம், நிராகரிப்பு எல்லாவற்றையும் சந்திக்கிறாள். எல்லாம் உணரும்போது அவள் போராடி மீண்டு வருகிறாள். இந்தக் கதாபாத்திரத்தின் வளர்ச்சியை எல்லோராலும் தொடர்புபடுத்தி உணரமுடியும். அதனால், என் பார்வையில் அந்தக் கதாபாத்திரத்தைப் பார்த்து என் பாணியில் நடிக்க முயற்சித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார் காஜல் அகர்வால்.
இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.