

'மாரி 2' சங்கத்தின் ஆட்சேபனையையும் மீறி வெளியானபோது பிரச்சினை வெடித்தது என்று விஷால் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
படங்கள் வெளியீடு தொடர்பாக குழு ஒன்றை அமைத்தது தயாரிப்பாளர் சங்கம். அதில் வெளியீட்டு தேதிக்கு அனுமதி பெற்றே, வெளியிட்டு வந்தார்கள் தயாரிப்பாளர்கள். கடந்தாண்டு டிசம்பர் இறுதியில் ஒரே வாரத்தில் 'மாரி 2', 'கனா', 'அடங்கமறு', 'சீதக்காதி' மற்றும் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' ஆகிய படங்கள் வெளியாகின.
தயாரிப்பாளர் சங்கத்தின் விதிகளை மீறி சில படங்கள் வெளியானதால், இனிமேல் வெளியீட்டு விஷயத்தில் தலையிடுவதில்லை என்று முடிவு செய்தது தயாரிப்பாளர் சங்கம். அதற்கான போடப்பட்ட வெளியீட்டு குழுவையும் கலைத்தது.
தற்போது இந்தச் சர்ச்சை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், 'தி இந்து' நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
கடந்த டிசம்பர் 21 அன்று 'மாரி 2' சங்கத்தின் ஆட்சேபனையையும் மீறி வெளியானபோது பிரச்சினை வெடித்தது. ’மாரி 2’ திரைப்படம் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்களின் படங்களோடு ஒரே நாளில் வெளியானது.
இது பற்றி, "நீ யார் என் பட வெளியீட்டை தடுக்க” என்று ஒருவர் கேட்கும்போது என்னால் எதுவும் செய்ய முடியாது. ஒரு படத்தின் கதையை கேட்க, படம்பிடிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் போது ஏன் வெளியிட சரியான தேதியை முடிவு செய்ய எடுத்துக் கொள்ளக் கூடாது? ஒரு மாத வட்டி கட்ட வேண்டும் என்பதால் அவசரப்பட்டு வெளியிட்டார்கள். எல்லாருக்கும் வசூல் பாதிக்கப்பட்டது.
இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.