

எம்.எஸ்.ராஜ் இயக்கியுள்ள ‘மெரினா புரட்சி’ படத்துக்கு, தணிக்கை வாரியம் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளது.
எம்.எஸ்.ராஜ் இயக்கியுள்ள படம் ‘மெரினா புரட்சி’. நாச்சியாள் ஃபிலிம்ஸ் சார்பில் அவரே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படம், ஜல்லிக்கட்டுக்காக மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
‘புட் சட்னி’ ராஜ்மோகன், மெரினா போராட்டத்தில் பங்கெடுத்த நவீன், சுருதி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை வாரிய உறுப்பினர்கள், படத்துக்கு தணிக்கைச் சான்று அளிக்க மறுத்துவிட்டனர். எனவே, ரிவைஸிங் கமிட்டியை நாடினார் எம்.எஸ்.ராஜ்.
நடிகை கவுதமி தலைமையிலான ரிவைஸிங் கமிட்டியும் ‘மெரினா புரட்சி’ படத்துக்குச் சான்றிதழ் அளிக்க மறுத்து, இரண்டாவது ரிவைஸிங் கமிட்டிக்கு படத்தை அனுப்பச் சொல்லிவிட்டது. எனவே, நீதிமன்றத்தை அணுகி தற்போது ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளனர்.
இந்தச் சான்றிதழைப் பெறுவதற்கான போராட்டம் குறித்துப் பேசிய எம்.எஸ்.ராஜ், “2017-ல் மெரினாவில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் நடத்தினர். மெரினாவில் பல லட்சம் பேர் ஒன்று கூடினாலும், அவர்களை இங்கே ஒன்றுகூடும்படி தன்னெழுச்சியாக வரவழைத்தது வெறும் 18 இளைஞர்கள்தான். மற்றபடி நடிகர்களோ, எந்த இயக்கத்தை, அமைப்பைச் சேர்ந்தவர்களோ அல்ல. அந்த 18 பேருக்கும் என்ன நோக்கம், மக்களை எப்படித் திரட்டினார்கள், வெற்றிகரமாக இந்தப் போராட்டத்தை எப்படி முடித்தார்கள் என இதில் கூறியுள்ளோம்.
இந்த ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்டது யார், அதன்பின்னால் உள்ள அரசியல் என்ன, இந்தப் போராட்டத்தை ஒடுக்க என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, அதை இளைஞர்கள் சாமர்த்தியமாக எப்படி முறியடித்தனர், கடைசி நாள் போராட்டம் வன்முறைக்களமாக மாறியதன் பின்னணியில் யார் இருக்கின்றனர் என்கிற உண்மையெல்லாம் மக்களுக்குத் தெரியவேண்டும் என்கிற நோக்கத்தில் தீவிரமாகப் புலனாய்வு செய்தே இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம்..
ஆனால், இந்த உண்மை வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக, தணிக்கைச் சான்றிதழே தரமுடியாது என்று சொல்லிவிட்டனர். பல்வேறுகட்ட போராட்டங்களுக்குப் பின் தற்போது நீதிமன்றத்தை அணுகி, ஒருவழியாக ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளோம். இந்த மாத இறுதியில் படத்தை வெளியிட இருக்கிறோம். அதில், பல உண்மைகள் வெளிவரும்” என்றார்.