

காதலிப்பதாக வதந்தி பரவி வருவதற்கு, தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி நாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். 'துருவ நட்சத்திரம்', 'இடம் பொருள் ஏவல்', 'கருப்பர் நகரம்', 'மெய்', 'பாண்டிராஜ் - சிவகார்த்திகேயன்' படம் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களிலும், தெலுங்கில் 2 படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று (மே 10) காலை முதலே ஐஸ்வர்யா ராஜேஷ் திரையுலகைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்து வருவதாவும், அவருடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பாக தொலைக்காட்சி, நாளிதழ், இணையதளங்கள் என அனைத்திலுமே செய்தி வெளியானது.
இந்தச் செய்தி தொடர்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பதிவில், “மக்களே, நான் எனது காதல் கதை பற்றி வதந்திகள் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அந்தக் காதலன் யார் என்று எனக்கும் சொல்லுங்கள். தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இப்படியான பொய் செய்திகளைப் பரப்புவதை தயவுசெய்து நிறுத்துங்கள். அப்படி ஏதாவது நடந்தால் உங்களுக்கு அதைச் சொல்லும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். நான் தனியாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.