விரைவில் ‘பிக் பாஸ் 3’: விஜய் டிவி அதிகாரபூர்வ அறிவிப்பு

விரைவில் ‘பிக் பாஸ் 3’: விஜய் டிவி அதிகாரபூர்வ அறிவிப்பு
Updated on
1 min read

விஜய் டிவியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. டிவி, செல்போன், பத்திரிகை என எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி. அத்துடன், வீட்டுக்குள்ளேயே பல போட்டிகளும் நடத்தப்படும்.

வருடத்துக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்ச்சியை, கடந்த இரண்டு வருடங்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். 2017-ம் ஆண்டு ஆரவ்வும், 2018-ம் ஆண்டு ரித்விகாவும் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில், மூன்றாவது சீஸன் தொடங்குவதற்கான நேரம் நெருங்கிவிட்டதால், அதைப் பற்றிய பல செய்திகள் ரசிகர்களிடையே பரவி வருகின்றன. இம்முறை கமல்ஹாசனுக்குப் பதில் நயன்தாரா தொகுத்து வழங்குகிறார் என்றும், விஜய் தொலைக்காட்சிக்குப் பதிலாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது என்றும் கூறப்பட்டது.

மேலும், ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் என சாந்தினி தமிழரசன், ரமேஷ் திலக், டி.ராஜேந்தர், ராதாரவி, கஸ்தூரி உள்ளிட்ட பலரின் பெயர்களும் வெளியாகின. ஆனால், சம்பந்தப்பட்ட அனைவருமே இதை மறுத்துள்ளனர்.

இன்னொரு பக்கம், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து’ என தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையாகியுள்ளது. பிரதமர் மோடி முதற்கொண்டு பாஜகவைச் சேர்ந்த பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கமலின் தேர்தல் பிரச்சாரம் கடந்த இரண்டு நாட்களாக ரத்து செய்யப்பட்டது.

கமல்ஹாசன் வீடு, அலுவலகம், தற்போது கொடைக்கானலில் தங்கியுள்ள தனியார் விடுதி ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அவர்மீது சில இடங்களில் வழக்குகளும் பதிவாகியுள்ளன. எனவே, இந்த விஷயம் ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியிலும் எதிரொலிக்கலாம், கமலுக்குப் பதிலாக வேறொருவர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கலாம் எனத் தகவல் பரவியது.

இவை எல்லாவற்றுக்கும் பதிலளிக்கும் வகையில், விரைவில் ‘பிக் பாஸ் 3’ என்ற 10 விநாடிகள் கொண்ட ப்ரமோ வீடியோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி. இதன்மூலம் கமல்ஹாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது உறுதியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in