

அருண் விஜய் போட்ட ஒரு சின்ன எமோஜி, மீண்டும் சிவகார்த்திகேயனை சீண்டியுள்ளதாக தகவல் பரவியுள்ளது.
'தடம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, பிரபாஸ் உடன் 'சாஹோ', 'பாக்ஸர்', 'அக்னி சிறகுகள்' உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அருண் விஜய். தற்போது 'பாக்ஸர்' படத்துக்காக தயாராகி வருகிறார்.
இந்நிலையில் மே 17-ம் தேதி அவர் ட்விட்டரில் போட்ட ஒரு எமோஜி, அவரை மீண்டும் சிக்கலில் மாட்டியுள்ளது. ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மே 17-ம் தேதி வெளியான படம் 'mr.லோக்கல்'. இப்படம் மிக மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.
அன்றைய தினம் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் எமோஜி ஒன்றை ட்வீட் செய்தார். பலரும் எதற்காக இது என்று குழம்பினார்கள். பின்பு பலரும் ”இது 'Mr.லோக்கல்' படத்தின் விமர்சனத்துக்கு டா” என்று கருத்து தெரிவிக்கத் தொடங்கினார்கள்.
முன்பாக, 'சீமராஜா' பட சமயத்தில் இவரது ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துகள் வெளியானது. அதில் சிவகார்த்திகேயனை மறைமுகமாக விமர்சிப்பது போல் இருந்தது. அடுத்த சில மணித்துளிகளில், எனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது என்று தெரிவித்தார் அருண் விஜய்.
தற்போது 'Mr.லோக்கல்' பட சமயத்திலும் மறைமுகமாக விமர்சித்துள்ளார் என்று பலரும் கருத்துகளை பதிவிடத் தொடங்கினார்கள். இதனைத் தொடர்ந்து அருண் விஜய் தனது ட்விட்டர் பதிவில், "நண்பர்களே.. எனது அடுத்த படம் அதிகாரப்பூர்வமாகிவிட்டது. அடுத்த வாரம் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும். எனது முந்தைய ட்வீட் இது தொடர்பானது தான். ஆகையால் தயவு செய்து அதனை தவறாக சித்தரிக்காதீர்கள். நான் தற்போது காதலிக்கும் எனது பணியில் மட்டுமே கவனமாகவுள்ளேன். நன்றி " என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், அருண் விஜய் - சிவகார்த்திகேயன் இருவருக்கும் புகைச்சல் தொடங்கியுள்ளதாக சமூகவலைதளத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.