Published : 30 May 2019 02:41 PM
Last Updated : 30 May 2019 02:41 PM

இது ‘தளபதி 63’ அப்டேட் கேட்பதற்கான நேரமல்ல; நேசமணிக்காகப் பிரார்த்திப்போம் - தயாரிப்பாளர்

‘தளபதி 63’ படத்தின் அப்டேட் கேட்பதற்கான நேரம் இதுவல்ல, நேசமணிக்காகப் பிரார்த்திப்போம் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா ஜான், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வருகின்ற தீபாவளிக்கு படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் குறித்த தகவல்களை அவ்வப்போது ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார் தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி. தற்போது, வடிவேலின் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ கதாபாத்திரம் உலக அளவில் ட்ரெண்டாகி வருவதால், அதை சம்பந்தப்படுத்தி ஒரு ட்வீட் செய்துள்ளார்.

அதில், “ ‘தளபதி 63’ படத்தின் அப்டேட் கேட்பதற்கான நேரம் இதுவல்ல, நேசமணிக்காகப் பிரார்த்திப்போம்” எனத் தெரிவித்துள்ளார். அவரின் இந்த ட்வீட்டுக்கு, வடிவேலு மீம்ஸைக் கொண்டே நகைச்சுவையுடன் பலரும் பதிலளித்து வருகின்றனர்.

‘Civil Engineering Learners’ என்ற ஃபேஸ்புக் பக்கம், சுத்தியல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, ‘இதற்கு உங்கள் நாட்டில் என்ன பெயர்?’ எனப் பதிவிட்டது. மே 27-ம் தேதி இப்பதிவு வெளியானதும், பலரும் கருத்து தெரிவிக்கத் தொடங்கினர். அதில், விக்னேஷ் பிரபாகர் என்பவர், "இதற்குப் பெயர் சுத்தியல். எதன்மீது இதைக்கொண்டு அடித்தாலும் ‘டங் டங்’ என்று சத்தம் வரும். ஜமீன் வீட்டில் பெயின்டிங் ஒப்பந்தக்காரர் நேசமணி தலைமீது, அவரது சொந்தக்காரர் சுத்தியலைப் போட்டுவிட்டார். இதனால் நேசமணி தலை உடைந்துவிட்டது. பாவம்" என்று கருத்திட்டார்.

உடனே, “அவர் எப்படியிருக்கிறார்?” என மற்றொருவர் கேட்க, “அவர் இப்போது நலம். அவருடைய அணியினர் உடனடியாக அவர்மீது தண்ணீரை ஊற்றி முதலுதவி கொடுத்துவிட்டனர்” என்று பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து, ‘அவருக்காகப் பிரார்த்திப்போம்’ என்று ஃபேஸ்புக் பக்கத்தில் #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது. இந்த ஹேஷ்டேக் பிரபலமாக, ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் என எல்லா சமூக வலைதளங்களிலும் நேசமணிக்கான பிரார்த்தனைக் கருத்துகள் இடப்பட்டன. இந்த ஹேஷ்டேக், நேற்றிரவு (மே 29) உலக அளவில் ட்ரெண்டாது. இப்போதும் இந்திய அளவில் ட்ரெண்டில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x