

‘கனா’ படத்தின் வெற்றி விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு சர்ச்சையானது குறித்துக் கேட்டபோது, ‘நான் என்றுமே தவறாகப் பேசியதில்லை’ என்றார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘கனா’. சிவகார்த்திகேயன் தயாரித்த இந்தப் படத்தை, அருண்ராஜா காமராஜ் இயக்கினார். அப்பாவாக சத்யராஜும், மகளாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்தனர். பெண்கள் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டது.
இந்தப் படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. ‘கனா’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரத்தின் பெயரான கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் அங்கு படமாகிறது. இதன் மோஷன் போஸ்டர் நேற்று (மே 25) வெளியானது.
இந்நிலையில், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்தார் ஐஸ்வர்யா ராஜேஷிடம், ‘நீங்கள் கமர்ஷியல் படங்களில் நடிப்பது குறித்து சினிமாத்துறையினர் என்ன நினைக்கின்றனர்?’ என்று கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், “கமர்ஷியல் இயக்குநர்களின் பட்டியலில் நான் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில்தான் இருப்பேன். எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. இரண்டு பாடல்கள், நான்கு காதல் காட்சிகள் என்ற வழக்கமான கதையில் நடிக்க எனக்கு ஆர்வமில்லை. அது எனக்கான படமல்ல” என்றவரிடம், ‘கனா’ வெற்றி விழாவில் அவரின் பேச்சு சர்ச்சையானது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு, “நான் வெளிப்படையாகப் பேசுவது ரசிகர்களின் பாராட்டைப் பெற்றாலும், சினிமாத்துறையில் சிலருக்கு அதிருப்தியைத் தருகிறது. ‘போல்டா பேசாதீங்க’ என்று பலர் என்னிடம் கூறியுள்ளனர். ஆனால், நான் என்றுமே தவறாகப் பேசியதில்லை. யாரையும் அவதூறாகப் பேசியதில்லை” என்றார்.
பாண்டிராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படத்தில், ஹீரோயினாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுபற்றிக் கேட்டபோது, “ஒரு படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் என்று கருதப்பட, ஹீரோயினாகத்தான் நடிக்க வேண்டும் என்றில்லை. நான் ஒரு வலிமையான, முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அதை நான் முதன்மைக் கதாபாத்திரமாகத்தான் பார்க்கிறேன்” எனப் பதிலளித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.