கோமதி மாரிமுத்து குறித்த கேள்விக்கு வரலட்சுமியின் பதில்: இணையத்தில் குவியும் பாராட்டு

கோமதி மாரிமுத்து குறித்த கேள்விக்கு வரலட்சுமியின் பதில்: இணையத்தில் குவியும் பாராட்டு
Updated on
1 min read

கோமதி மாரிமுத்து குறித்த கேள்விக்கு வரலட்சுமி அளித்த பதிலுக்கு திரையுலகினர் மத்தியில் மட்டுமின்றி இணையத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சிறப்பு குழந்தைகளுக்கான கால்பந்து போட்டி சென்னையில் ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த சிறப்பு குழந்தைகள் பங்கேற்கவுள்ளனர். இதன் விளம்பரத் தூதுவராக வரலட்சுமி சரத்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு மே 2-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் வரலட்சுமி கலந்துகொண்டு பேசினார். அப்போது பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

”முதன்முறையாக இந்தியாவில் இப்படியொரு போட்டி நடைபெறுகிறது. அதற்கு நான் விளம்பர தூதுவர் என்னும் போது சந்தோஷமாக இருக்கிறது. கோமதி மாரிமுத்து தங்கம் வென்றது பெருமைக்குரிய விஷயம். அனைவருக்குள்ளும் ஒரு திறமை இருக்கிறது. சரியான வாய்ப்பு அமைந்தால் திறமை வெளிப்படும்” என்று வரலட்சுமி பேசினார்.

அப்போது "ஜெயித்தவுடன் தான் கோமதி மாரிமுத்து பற்றி பேசப்படுகிறார். அதற்கு முன்பு'' என பத்திரிகையாளர் கேள்வியை முடிக்கும் முன்பே வரலட்சுமி, “அது யாருடைய தப்பு. அவர் ஜெயித்தவுடன் தானே மீடியாவில் அனைவருமே சொன்னீர்கள். ஜெயிப்பதற்கு முன்பு யாருமே சொல்லவில்லையே” என்று தெரிவித்தார்.

இதற்கு, “தமிழக அரசு உதவி செய்யவில்லை என்று சொன்னாரே, தவிர மீடியாவைப் பற்றி எதுவும் சொல்லவில்லை” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, “மீடியாவைப் பற்றி அவர் எதுவும் சொல்லமாட்டார். ஏனென்றால் மீடியா தனிப்பட்ட ஒரு குரூப். நீங்கள் எப்படி காட்டுகிறீர்களோ, அப்படித்தான் வெளியே தெரியவரும். சினிமா நிகழ்ச்சிகளை எப்படி விளம்பரப்படுத்துகிறீர்களோ, அதைப் போல் இம்மாதிரியான நிகழ்ச்சிக்கும் பண்ண வேண்டும்” என்று பதிலளித்தார் வரலட்சுமி.

அதனைத் தொடர்ந்து, “இந்த நிகழ்ச்சியைப் பற்றி மட்டும் பேசுவோம். வேறு எந்தவொரு கேள்வியும் வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார் வரலட்சுமி. ஆனால் “கோமதி மாரிமுத்து கிழிந்த ஷூ போட்டு ஓடியுள்ளார். அவருக்கு உங்களுடைய தரப்பிலிருந்து ஏதேனும் உதவிகள் உண்டா” என்று பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்.

“ஜி.வி.பிரகாஷ் உதவி செய்திருப்பதாக கேள்விப்பட்டேன். நீங்கள் என்ன உதவி பண்ணினீர்கள்?” என்று கேட்டார் வரலட்சுமி. "நான் எதுவும் பண்ணல மேடம்” என்று பத்திரிகையாளர் பதிலளிக்க, “ஏன் பிரபலங்களிடம் மட்டுமே இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. கேட்கக்கூடாது. முதலில் நீங்கள் பண்ணுங்கள். பின்பு பிரபலங்களிடம் கேளுங்கள்” என்று தெரிவித்தார் வரலட்சுமி சரத்குமார்.

வரலட்சுமியின் இந்தப் பேச்சு அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியானது. இந்தப் பதிலுக்கு இணையவாசிகள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஆகியோரும் பாராட்டு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in