

கெடுபிடிகளைத் தாண்டியும் 'தளபதி 63' படப்பிடிப்பிலிருந்து படங்கள் லீக்கானது எப்படி என்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது படக்குழு.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படப்பிடிப்பு, சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படுவேகமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி வெளியீடு என்பதால், இறுதிக்கட்டப் பணிகளையும் துரிதப்படுத்தியுள்ளது.
இப்படத்தின் சில முக்கியமான காட்சிகளுக்காக, ஃபுட்பால் ஸ்டேடியம் ஒன்றை வடிவமைத்து, அதற்குள் படமாக்கினர். அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகியுள்ளன. அதில், பல பெண்கள் கால்பந்து விளையாடுவது போலவும், விஜய் உள்ளிட்டோர் அமர்ந்து பார்ப்பது போலவும் அமைந்துள்ளது.
மேலும், தனியார் நிறுவனப் பேருந்தில் இருந்து விஜய் இறங்கும் சிறு வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அவர் ஃபுட்பால் டீம் கோச்சாக நடிப்பதால், ஸ்டைலாக இறங்குவது போல் காட்சிப்படுத்தியுள்ளனர்.
பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும் லீக்கானது எப்படி என்று தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது படக்குழு. மேலும், எங்கிருந்து அதைப் படம்பிடித்தனர், யார் அந்தத் தருணத்தில் இருந்தது உள்ளிட்ட விஷயங்களையும் ஆராய்ந்து வருகின்றனர்.
நயன்தாரா, யோகி பாபு, கதிர், ஜாக்கி ஷெராஃப், இந்துஜா, விவேக் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை உருவாக்கி வருகிறது.