

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'ஐ' படத்தின் டீஸர், 'யூடியூப்பில் ஒரு கோடி பேர் பார்த்த தமிழ் சினிமா டீஸர்' என்ற சாதனையை விரைவில் படைக்கும் எனத் தெரிகிறது.
விக்ரம், ஏமி ஜாக்சன், உபன் பட்டேன் உள்ளிட்டோர் பலர் நடித்திருக்கும் 'ஐ' படத்தை இயக்கி இருக்கிறார் ஷங்கர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை ஆஸ்கர் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
படத்தின் தயாரிப்பு செலவு, இசை வெளியீட்டு விழாவிற்கு ஹாலிவுட் பிரபலங்கள் என பலரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது 'ஐ'.
யுடியூப் தளத்தில் 1 கோடி பேர் பார்த்த ரசித்த தமிழ் சினிமா டீஸர் என்ற பெருமையை விரைவில் எட்ட இருக்கிறது 'ஐ' படத்தின் டீஸர்.
தற்போது 60 லட்சத்திற்கும் அதிகமானோர் 'ஐ' டீஸரைப் பார்த்துள்ளனர். இதுவரை எந்த ஒரு தமிழ் படத்திற்கும் இவ்வளவு எண்ணிக்கை இருந்ததில்லை. 10 நாட்களுக்குள் 60 லட்சத்தைத் தாண்டி இருப்பதால், விரைவில் 1 கோடி பேரை எட்டி சாதனை படைக்கும் என்கிறார்கள்.
'ஐ' படக்குழு தீபாவளிக்கு வெளியிடும் பணியில் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட உரிமைகளை பெரும் விலைக் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.
விரைவில், ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன் தலைமையில் 'ஐ' படத்தின் இந்தி பதிப்பு பாடல்கள் வெளியீடு நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதனை தயாரிப்பு நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.