

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை இயக்குநர் சி.எஸ்.அமுதன் தனது ட்விட்டர் பதிவில் கிண்டல் செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் (எக்ஸிட் போல்ஸ்) தெரிவிக்கின்றன.
‘டைம்ஸ் நவ்’ பாஜக 306 இடங்களைப் பிடிக்கும் என்றும், ‘ரிபப்ளிக் சிவோட்டர்’ பாஜக 287 இடங்களைப் பிடிக்கும் என்றும், ‘நியூஸ் 18’ பாஜக 336 இடங்களைப் பிடிக்கும் என்றும், ‘நியூஸ் நேஷன்’ பாஜக 290 இடங்களைக் கைப்பற்றும் என்றும், ‘நியூஸ் எக்ஸ்’ பாஜக 242 இடங்களைக் கைப்பற்றும் என்றும் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. இந்தக் கணிப்புகளால் பாஜக கூட்டணிக் கட்சியினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
எப்போதுமே தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் தொனியில் கருத்துகளைத் தெரிவிப்பவர் இயக்குநர் சி.எஸ்.அமுதன். இந்தத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து தனது ட்விட்டர் பதிவில், “இந்தத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளைப் பார்த்தபின், தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தலில் வெற்றிபெறப்போகிறது என்பது தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்பதை மறைமுகமாகக் கிண்டல் செய்துள்ளார் சி.எஸ்.அமுதன் என்பது குறிப்பிடத்தக்கது.