

மீண்டும் அன்புச்செல்வனாக நடிக்க ஆசை என்று ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது சூர்யா குறிப்பிட்டார்
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'என்.ஜி.கே'. மே 31-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளது படக்குழு.
இந்நிலையில், படத்தை விளம்பரப்படுத்தும் பொருட்டு சமூக வலைதளங்களில் #AskSuriya என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சூர்யா பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் "நீங்கள் நடித்த கதாபாத்திரங்களில், மீண்டும் நடிக்க விரும்பும் கதாபாத்திரம் எது?" என்று சூர்யாவிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு சூர்யா “எனக்கு நிறைய படங்கள், நிறைய அன்பைக் கொடுத்துள்ளன. நிறைய பேருக்கு 'அயன்', 'மெளனம் பேசியதே', 'காக்க காக்க' பிடித்திருந்தது. ஆனால், எனக்கு தனிப்பட்ட முறையில் ’காக்க காக்க’ அன்புச்செல்வனாக நடிக்க ஆசை” என்று தெரிவித்துள்ளார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, ஜீவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'காக்க காக்க'. 2003-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.