

தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் ஆர்.கே.சுரேஷ்.
‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். சில படங்களுக்குப் பிறகு ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோவாக நடித்தார். கடந்த வருடம் (2018) இந்தப் படம் ரிலீஸானது. தற்போது ‘வேட்டை நாய்’ படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ என்ற படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். மஞ்சித் திவாகர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ஆர்.கே.சுரேஷ்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து பேசும் இப்படத்தின் கதை, கொச்சினில் இருந்து சென்னைக்குப் பயணிக்கிறது. எனவே, இப்படத்தின் கதாபாத்திரங்கள் 70 சதவீதம் தமிழும், 30 சதவீதம் மலையாளமும் பேசுவதுபோல் படம் உருவாகியுள்ளது.
ஆர்.கே.சுரேஷுடன் இணைந்து வினோத் கிருஷன், சிவாஜி குருவாயூர், சினோஜ் வர்கீஸ், நேகா சக்சேனா, சார்மிளா, அக்ஷிதா, ரத்தினவேல், ஷஷாத் அப்துல்லா திப், அபு பக்கர் ஆகியோர் நடித்துள்ளனர். பாலக்காடு, கொச்சின், குருவாயூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், கோவை, சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
விரைவில் இதன் ட்ரெய்லர் ரிலீஸாக இருக்கிறது.