

‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா, சில வருட இடைவெளிக்குப் பிறகு இயக்கிய படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. கடந்த மார்ச் 29-ம் தேதி ரிலீஸான இந்தப் படத்துக்கு, சென்சார் போர்டு உறுப்பினர்கள் ‘ஏ’ சான்றிதழ் அளித்தனர். விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா, மிஷ்கின், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். 4 கதைகளின் தொகுப்பாக இந்தப் படம் உருவாகியிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார்.
‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்கு எதிர் விமர்சனங்கள் எழுந்தது போலவே, ஆதரவுக் குரல்களும் பலமாக ஒலித்தன. ‘தமிழ் சினிமாவில் இப்படியொரு படமா?’ என சினிமா பிரபலங்கள் சிலாகித்துக் கொண்டாடினர். வசூலிலும் இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைத்தது.
இந்தப் படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களைப் பற்றி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான கருத்துகள் இருந்தாலும், அனைவராலும் கொண்டாடப்பட்ட ஒரே கதாபாத்திரம் ‘ராசுக்குட்டி’. விஜய் சேதுபதி (ஷில்பா) - காயத்ரி தம்பதியின் மகனாக இடம்பெற்ற இந்தக் கதாபாத்திரத்தில், அஷ்வந்த் என்ற சிறுவன் நடித்தான்.
இந்தச் சிறுவன், தற்போது ஜோதிகா - கார்த்தி நடிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறான். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், நிகிலா விமல், சத்யராஜ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அக்கா - தம்பியாக ஜோதிகா - கார்த்தி நடிக்க, அவர்களுடைய அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார்.
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். வயாகாம் 18 நிறுவனம், இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. கடந்த மாதம் (ஏப்ரல்) 27-ம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது ஊட்டியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.