

இந்திய சினிமாவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க படம் 'சூப்பர் டீலக்ஸ்' என்று கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா புகழாரம் சூட்டியுள்ளார்.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சூப்பர் டீலக்ஸ்'. விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டாலும், வசூல் ரீதியாக படம் தோல்வியைத் தழுவியது.
திரையுலகப் பிரபலங்கள் பலரும் இப்படத்துக்கு பாராட்டு தெரிவித்ததால், தற்போது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது இப்படத்தை கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க படம் 'சூப்பர் டீலக்ஸ்'. வித்தியாசமான, ஆழமான, பல கேள்விகளை எழுப்பும் படம். உண்மையான கலைப் படைப்பு. தியாகராஜன் குமாரராஜாவுக்குத் தலைவணங்குகிறேன். பரத்வாஜ் ரங்கனின் விமர்சனம் ஏன் அவ்வளவு அற்புதமாக இருந்தது என்று இப்போது தெரிகிறது.
சமூகத்தின் சிக்கல்கள், கவித்துவமான படங்கள் ஆகியவற்றைத் தமிழ் இயக்குநர்கள் எப்படி திரைக்குக் கொண்டு வந்துகொண்டிருக்கின்றனர் என்பதைத் தெரிந்துகொள்ள, 'பரியேறும் பெருமாள்', 'சூப்பர் டீலக்ஸ்' போன்ற படங்களை பாலிவுட் பார்க்க வேண்டும். பா.இரஞ்சித், மாரி செல்வராஜ், குமாரராஜா (என இயக்குநர்களைப் பார்த்தால்) இது தமிழ் சினிமாவின் பொற்காலம் போலத் தெரிகிறது. 'மேற்கு தொடர்ச்சி மலை' என்ற அற்புதமான படத்தின் இயக்குநர் லெனின் பாரதியையும் நான் இங்கு குறிப்பிடவிரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார் டி.எம்.கிருஷ்ணா.