

‘ஹீரோ’ தலைப்பு சிவகார்த்திகேயனுக்கா அல்லது விஜய் தேவரகொண்டாவுக்கா என்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘Mr. லோக்கல்’. எம்.ராஜேஷ் இயக்கிய இந்தப் படத்தில், ஹீரோயினாக நயன்தாரா நடித்தார். யோகி பாபு, சதீஷ், ரோபோ சங்கர், ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். ‘Mr. லோக்கல்’ படத்தைத் தொடர்ந்து, ‘இரும்புத்திரை’ பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிவகார்த்திகேயன். அந்தப் படத்துக்கு ‘ஹீரோ’ எனத் தலைப்பு வைத்து, கடந்த மார்ச் 13-ம் தேதி பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் இவானா இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். அர்ஜுன், முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் தலைப்பு வெளியான அதே தினத்தில் (மார்ச் 13), விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்துக்கும் ‘ஹீரோ’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ‘காக்கா முட்டை’ படத்துக்கு வசனமும், ‘குற்றமே தண்டனை’ படத்தின் திரைக்கதையை இயக்குநரோடு இணைந்து எழுதிய ஆனந்த் அண்ணாமலை இந்தப் படத்தை இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 4 தென்னிந்திய மொழிகளிலும் இந்தப் படம் உருவாகிறது. ‘பேட்ட’ படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன், ஹீரோயினாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
சிக்கல் ஏற்பட்டது எப்படி?
இப்படி இரண்டு படங்களுக்குமே ஒரே தலைப்பு வைக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் மட்டுமின்றி படக்குழுவினரும் குழம்பிப் போயுள்ளனர். காரணம், இரண்டு படக்குழுவினருமே தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அனுமதி வாங்கித்தான் இந்தத் தலைப்பை வைத்துள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையாக மாற, இரண்டு படக்குழுவினருமே தயாரிப்பாளர் சங்கத்தில் தாங்கள் பெற்ற அனுமதியை வெளியிட்டுள்ளனர்.
விஜய் தேவரகொண்டா படத்துக்காக ஏற்கெனவே ‘ஹீரோ’ என்ற தலைப்பைத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவுசெய்து, அதைக் கடந்த வருடம் (2018) ஜூன் மாதம் 14-ம் தேதி புதுப்பித்துள்ளனர். வருகிற ஜூன் மாதம் 14-ம் தேதிவரை அதற்கான காலக்கெடு உள்ளது. இந்த ரசீதை விஜய் தேவரகொண்டா படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதேசமயம், ‘ஹீரோ’ என்ற தலைப்பை வைத்துக்கொள்ள சிவகார்த்திகேயன் படத்துக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதி அளித்துள்ளது. கடந்த பிப்ரவரி 22-ம் தேதி இதற்கான கடிதத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸுக்கு அளித்துள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம்.
விட்டுக்கொடுக்க ஏன் தயாரில்லை?
இந்த சிக்கல் தொடர்ந்து நீடிக்க, இரு தரப்பினருமே தலைப்பை விட்டுக் கொடுப்பதற்குத் தயாராக இல்லை என்பதுதான் சினிமாத்துறையினரிடம் பேச்சாக இருக்கிறது. 4 மொழிகளில் ரிலீஸாவதால், அனைத்து மொழிகளுக்குமான ஒரே தலைப்பாக ‘ஹீரோ’ இருக்கும் எனக் கருதுகிறது விஜய் தேவரகொண்டா படக்குழு. கதைக்கேற்ற பொருத்தமான தலைப்பு இதுதான் எனக் கருதுகிறது சிவகார்த்திகேயன் படக்குழு. அத்துடன், முதலில் தலைப்பை அறிவித்தது சிவகார்த்திகேயன் படக்குழுதான் என்பதால், வேறு தலைப்பு மாறினால் அது சிவகார்த்திகேயனின் கெத்துக்கு இழுக்காகவும் பார்க்கப்படும்.
யாருக்கு வாய்ப்பு அதிகம்?
சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு, சுமார் 50 சதவீதம் வரை முடிந்துவிட்டது. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், விரைவில் ‘ஹீரோ’ படத்தின் மீதமுள்ள காட்சிகளில் நடிக்கவுள்ளார். யுவனின் இசையில் 5 பாடல்கள் தயாரான பிறகுதான் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது என்பதால், இதன் ஷூட்டிங் சீக்கிரமாகவே முடிந்து விடுவதற்கான சாத்தியம் அதிகம்.
இன்னொரு பக்கம், கடந்த 19-ம் தேதி தான் விஜய் தேவரகொண்டா படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. 4 மொழிகள் என்பதால், இதன் அனைத்துப் பணிகளும் முடிவடைய கால தாமதம் ஏற்படும். ஆனால், அதற்குள் சிவகார்த்திகேயன் படம் ரிலீஸாவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆக, இந்தச் சர்ச்சைக்கு விரைவில் முடிவு கட்டப்படலாம்.
இன்னொரு முக்கியமான விஷயம், ஒரே தலைப்பில் உருவாகும் இந்தப் படங்களில், சிவகார்த்திகேயன் - விஜய் தேவரகொண்டா இருவருமே பைக் ரேஸராக நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.