உண்மையான அழகு என்பது: வைரலாகும் காஜல் அகர்வாலின் பதிவு, மேக்கப் இல்லாத படங்கள்

உண்மையான அழகு என்பது: வைரலாகும் காஜல் அகர்வாலின் பதிவு, மேக்கப் இல்லாத படங்கள்
Updated on
1 min read

மேக்கப் இல்லாமல் காஜல் அகர்வால் செய்துள்ள போட்டோ ஷூட் படங்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். 2004-ம் ஆண்டு இந்தி திரையுலகில் அறிமுகமானவர், 2007-ம் ஆண்டு தெலுங்கில் 'லட்சுமி கல்யாணம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நாயகர்களுக்கு நாயகியாக நடித்துள்ளார்.

தற்போது தமிழில் 'பாரீஸ் பாரீஸ்', 'கோமாளி' மற்றும் 'இந்தியன் 2' ஆகிய படங்களிலும், தெலுங்கில் ஒரு படத்திலும் காஜல் நடித்து வருகிறார்.

பெரும்பாலும் நாயகிகள் மேக்கப் எல்லாம் செய்து தான் போட்டோ ஷூட் செய்வார்கள். ஆனால், முதன்முறையாக மேக்கப் இல்லாமல் போட்டோ ஷூட் செய்து, அப்புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, மேக்கப் பொருட்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறித்து பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.

அப்பதிவில் காஜல் அகர்வால், “இப்போதெல்லாம் மனிதர்களால் தங்களை இனம் கண்டுகொள்ளவே முடிவதில்லை. ஒருவேளை நாம் உடல் அழகால் மயங்கியிருக்கும் உலகத்தில் வாழ்வதால் இருக்கலாம் அல்லது சமூக ஊடகம் யாரை, எதை முக்கியப்படுத்துகிறது என்பதில் நமது சுய மரியாதையை விழுங்கியதால் இருக்கலாம்.

உங்களுக்கு கச்சிதமான உடலைத் தருவதாக வாக்கு தரும் அழகு சாதனப் பொருட்களை வாங்க கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. தற்பெருமை / சுயமெச்சுதல் எல்லா இடத்திலும் காணக்கிடைக்கிறது. இந்தக் கோடுகளுக்கு நடுவில் அந்தக் கூட்டத்தோடு நாம் இணைய முயற்சிக்கிறோம் அல்லது தனியாக விடப்பட்டதாய் நினைக்கிறோம்.

ஆனால் நம்முடைய வேறொரு பிம்பத்தைப் பெறுவதற்கு முயற்சிப்பதை விட, நாம் நமது உண்மையான சுயத்தை ஏற்றுக்கொண்டால் தான் நம்மால் உண்மையில் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். ஒப்பனை நமது உடலை வேண்டுமானால் அழகாக்கலாம். ஆனால் நமது குணத்தைக் கட்டமைக்குமா? நாம் யார் என்பதை சொல்லுமா? உண்மையான அழகு என்பது, நம்மிடம் இருக்கும் அழகை அப்படியே ஏற்றுக்கொள்வதில் தான் இருக்கிறது” என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in