

என் காட்சிகளை உபயோகிக்க வேண்டாம் என்று 'ஆதித்யா வர்மா' படக்குழுவினருக்கு பாலா அறிவுறுத்தியுள்ளார்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் பெரும் வரவேற்பு பெற்ற தெலுங்கு படம் ‘அர்ஜுன் ரெட்டி’. முதலில் தமிழில் பாலா இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. விக்ரமின் மகன் துருவ் விக்ரமின் அறிமுகப்படமாக இது அமைந்தது.
ஆனால், இறுதிப் பிரதியைப் பார்த்த தயாரிப்பாளர்களுக்கு, படம் திருப்தி அளிக்கவில்லை. ஆகையால், முழுமையாகத் தயாரான ‘வர்மா’ படத்தை அப்படியே ஓரம் வைத்துவிட்டார்கள். இது தமிழ் சினிமாவில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து அதே தயாரிப்பாளர், ’அர்ஜுன் ரெட்டி’ படத்தை ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் மீண்டும் ரீமேக் செய்தார். இதனை, ‘அர்ஜுன் ரெட்டி’ இயக்குநர் சந்தீப் வங்காவிடம் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாய்யா இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளராக ரவி.கே.சந்திரனும், இசையமைப்பாளராக ரதனும் பணிபுரிகின்றனர். துருவ் விக்ரம், பனிடா சாந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜூன் அல்லது ஜூலையில் படத்தை வெளியிட ஆயுத்தமாகி வருகிறது படக்குழு. இந்த தருணத்தில் பாலா தரப்பிலிருந்து விக்ரமிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதன் மூலம் விக்ரம் - பாலா இருவருக்குமான நட்பு முறிந்துவிட்டது என்றெல்லாம் செய்திகளை பரப்பினார்கள்.
உண்மை என்ன என்பது குறித்து 'ஆதித்யா வர்மா' படக்குழுவினரிடம் விசாரித்த போது, "அது தவறான செய்தி. முதலில் பாலா வக்கீல் நோட்டீஸ் அனுப்பவில்லை. 'ஆதித்யா வர்மா' படத்தின் தயாரிப்பாளருக்கு இயக்குநர் பாலா தரப்பில் ஒரு இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. அதில், தான் இயக்கிய 'வர்மா' படத்தில் எந்தவொரு காட்சியையும் 'ஆதித்யா வர்மா' படத்தில் சேர்க்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்” என்று தெரிவித்தார்கள்.
'ஆதித்யா வர்மா' படத்தின் டீஸர், பாடல்கள் வெளியீட்டு தேதி ஆகியவற்றை விரைவில் அறிவித்து விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவுள்ளனர். இந்த தருணத்தில் பாலா இவ்வாறு அறிவுறுத்தியிருப்பது நினைவுக் கூறத்தக்கது.