

மல்டி ஸ்டார் படங்களில் நடிக்க சிலர் அச்சப்படுகிறார்கள் என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
'சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்துக்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ராணாவுடன் நடித்து வந்தார் விஷ்ணு விஷால். அப்போது சண்டைக் காட்சிகள் படமாக்கும் போது அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. நீண்ட சிகிச்சைக்குப் பிறகு தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் விஷ்ணு விஷால்.
தமிழ் சினிமாவில் தற்போதுள்ள சூழல் குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு நீண்ட பேட்டியொன்றை அளித்துள்ளார் விஷ்ணு விஷால். அதில் மல்டி ஸ்டார் எனப்படும் நிறைய நடிகர்கள் நடித்து உருவாகும் படங்கள் ஏன் தமிழ் சினிமாவில் அதிகம் வருவதில்லை என்ற கேள்விக்கு விஷ்ணு விஷால் கூறியிருப்பதாவது:
''எல்லா நடிகர்களுக்கும் சரியான சமநிலையான கதாபாத்திரத்துடன் மல்டி ஸ்டார் படம் எடுக்கும் இயக்குநர்களை கண்டுபிடிப்பது அரிது. தமிழில் கடைசியாக வந்த நல்ல மல்டி ஸ்டார் படம் 'செக்கச்சிவந்த வானம்'.
நடிகர்களிடமும் ஒரு தயக்கமுள்ளது. நமது கடைசிப் படத்தின் வரவேற்பை வைத்துதான் நம்மைப் பற்றிய மதிப்பீடு இருக்கும். அடுத்த படம் முந்தைய படத்தை விட அதிகமாக வசூலித்தால்தான் துறையில் வெற்றி பெற்றவர் என நம்மை ஒப்புக்கொள்கிறார்கள். சிலர் மல்டி ஸ்டார் படத்தில் நடித்தால் ரசிகர் மன்றங்களை இழப்போம் என அஞ்சுகிறார்கள். அடுத்து சம்பளப் பிரச்சினையும் உண்டு''.
இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.