‘அயோக்யா’ படத்தை ரசித்த ‘தர்பார்’ படக்குழு

‘அயோக்யா’ படத்தை ரசித்த ‘தர்பார்’ படக்குழு
Updated on
1 min read

விஷாலின் நடிப்பில் வெளியான ‘அயோக்யா’ படத்தைப் பார்த்து ரசித்துள்ளது ‘தர்பார்’ படக்குழு.

வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘அயோக்யா’. விஷால் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ராஷி கண்ணா ஹீரோயினாக நடித்தார். ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான ‘டெம்பர்’ தெலுங்குப் படத்தின் ரீமேக் இது.

பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், தேவதர்ஷினி, ஆனந்த் ராஜ், வம்சி கிருஷ்ணா, பூஜா தேவரியா, சோனியா அகர்வால், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

கடந்த 11-ம் தேதி ரிலீஸான இந்தப் படத்துக்கு, நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. ரசிகர்களும் இந்தப் படத்தைக் கொண்டாடினர். எனவே, இதன் ஒவ்வொரு டிக்கெட் தொகையில் இருந்தும் ஒரு ரூபாயை விவசாயிகளுக்கு வழங்க முடிவெடுத்துள்ளார் விஷால்.

இந்நிலையில், தன்னுடைய ‘தர்பார்’ படக் குழுவினருடன் ‘அயோக்யா’ படத்தைப் பார்த்து ரசித்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். ‘அயோக்யா’ படத்தின் இயக்குநர் வெங்கட் மோகன், ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“என்னுடைய ‘தர்பார்’ குழுவினருடன் ‘அயோக்யா’ படத்தைப் பார்த்துவிட்டேன். மிகச்சிறந்த படத்தைக் கொடுத்ததற்காக வெங்கட் மோகன், விஷால் இருவருக்கும் வாழ்த்துகள். படத்தை நாங்கள் மிகவும் ரசித்துப் பார்த்தோம்” எனத் தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

‘தர்பார்’ படத்தில் ரஜினி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நிவேதா தாமஸ், யோகி பாபு, ப்ரதீக் பப்பார், தலிப் தஹில், ஆனந்த் ராஜ், போஸ் வெங்கட், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த மாத (மே) இறுதியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in