

‘தளபதி’ படத்தின் இசையை வயலினில் வாசித்துள்ள கோவிந்த் வசந்தா, எப்போதுமே இளையராஜா ரசிகன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சி.பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த வருடம் ரிலீஸான படம் ‘96’. விஜய் சேதுபதி, த்ரிஷா, ஆதித்யா, கெளரி கிஷண், தேவதர்ஷினி, பகவதி பெருமாள், காளி வெங்கட், ஜனகராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். கோவிந்த் வசந்தா இசையமைத்தார்.
பெரும்பாலானவர்களின் பள்ளிக்காலக் காதல் நினைவுகளைக் கிளறிய இந்தப் படம், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. எனவே, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
இந்தப் படத்தில், கதாநாயகியான ஜானு கதாபாத்திரம், இளையராஜா இசையில் பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி பாடிய பாடல்களைப் பாடுவதாகக் கதை அமைந்திருக்கும். எல்லோரும் இதை ரசித்தனர்.
ஆனால், சமீபத்தில் இதுகுறித்துப் பேட்டியளித்த இளையராஜா, ‘இது தவறான விஷயம்’ என்று சொன்னதோடு மட்டுமின்றி, தகாத வார்த்தையையும் பயன்படுத்தினார். இதனால் இந்த விஷயம் விவாதத்துக்கு உள்ளானது. சமூக வலைதளங்களில் இளையராஜாவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் குரல்கள் ஒலித்தன.
இந்நிலையில், இளையராஜாவின் சர்ச்சைக் கருத்துக்குத் தன்னுடைய இசை மூலம் பதில் அளித்துள்ளார் கோவிந்த் வசந்தா.
இளையராஜா இசையமைப்பில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தளபதி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலில் இருந்து ஒரு சரணத்தின் சில வரிகளை வயலினில் வாசித்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள கோவிந்த் வசந்தா, ‘எப்போதுமே இளையராஜா ரசிகன் தான்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.