

'அயோக்யா' மற்றும் '100' ஆகிய பட வெளியீட்டு நிலவி வந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு, இன்று (மே 11) வெளியாகியுள்ளது.
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'அயோக்யா' மற்றும் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள '100' ஆகிய படங்கள் மே முதல் வார வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்டன. ஆனால், இரண்டு படங்களுமே தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட திடீர் பண நெருக்கடியால் வெளியாகவில்லை.
இதனைத் தொடர்ந்து இரண்டு படங்களின் வெளியீட்டுக்கும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. 'அயோக்யா' படத்துக்கு 4.25 கோடி ரூபாய்க்கும், '100' படத்துக்கு 1.5 கோடி ரூபாய்க்கும் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதனால் திட்டமிட்டப்படி மே 9-ம் தேதி '100' படமும், மே 10-ம் தேதி 'அயோக்யா' படமும் வெளியாகவில்லை.
நேற்றிரவு (மே 10) இரண்டு படங்களின் மீதான அனைத்து பிரச்சினைகளுமே முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு படங்களுமே இன்று (மே 11) வெளியாகவுள்ளது. இரண்டு படக்குழுவினருமே 'தடைகளைத் தகர்த்தெறிந்து வருகிறோம்' என்று விளம்பரப்படுத்தியுள்ளனர்.
ஆனால், திட்டமிட்டபடி வெளியாகாததால் இரண்டு படக்குழுவினருக்குமே நஷ்டம் தான். கோடை விடுமுறை என்பதால் இந்தத் தேதியை விட்டால், வேறு தேதி கிடைக்காது என்று உடனடியாக வெளியீடு என்று அறிவித்துள்ளார்கள். ஏனென்றால் அடுத்த வாரம் மே 17-ம் தேதி வெளியீடாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'Mr.லோக்கல்' மற்றும் 'மான்ஸ்டர்' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.