தமிழகத்தின் தனித்துவமான குரல்: தேர்தல் முடிவுகள் குறித்து சித்தார்த்

தமிழகத்தின் தனித்துவமான குரல்: தேர்தல் முடிவுகள் குறித்து சித்தார்த்
Updated on
1 min read

தமிழகத்தின் தனித்துவமான குரல் என்று மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து சித்தார்த் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல், கடந்த 19 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், இன்று (மே 23) நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. பகல் 12:45 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 335 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 92 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.  மத்தியில் பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது.

இந்தத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக சித்தார்த் தனது ட்விட்டர் பதிவில், “எதிர்பார்த்ததைப் போலவே பாஜக, காங்கிரஸை படுமோசமாகப் புதைக்கிறது. ஒழுங்கான எதிர்க்கட்சி இல்லாமல் எளிதாக ஆட்சி அமைக்கும் நிலை ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது. வாக்காளர்கள் தெளிவாக, உரக்கப் பேசியுள்ளனர்.

தமிழகம், அதன் தனித்துவமான குரலில் பேசியுள்ளது. அதிமுகவுக்கு எதிரான அலை அற்புதமாக வீசுகிறது. திமுக கண்ணியமாகப் பிரச்சாரம் செய்துள்ளது. மாநிலமும், அதன் எதிர்காலமும், அதன் கையிலேயே இருக்கும். இது, கடந்த சில வருடங்களாக மாநிலத்தில் இருந்த குழப்பத்தைத் தொடர்ந்து, ஒரு உறுதித்தன்மைக்கு வழிவகுக்கும்.

வாக்கு இயந்திரத்தில் கோளாறு போன்ற குழந்தைத்தனமான காரணங்களை ஒதுக்க வேண்டும். ஒழுங்காகச் செயல்படாத தேர்தல் ஆணையம் இருந்திருக்கலாம். ஆனால், தேர்தல் முறை ஒழுங்காக இருக்கிறது. மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும். பாஜகவும் மோடியும் வெற்றி பெறுவதை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டனர். பிரக்யா தாகூர் வென்று, அதிஷி தோற்றால், நாம் எதற்கு முக்கியத்துவம் தருகிறோம் என்பது தெளிவாகும். எப்படி இருக்கிறது வெறுப்பு? அற்புதம் இல்லையா...” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in