

‘பண்ணையாரும் பத்மினி’, ‘சேதுபதி’ படங்களைத் தொடர்ந்து எஸ்.யு.அருண் குமார் இயக்கியுள்ள படம் ‘சிந்துபாத்’. இந்தப் படத்திலும் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார்.
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியும் சூர்யாவும் சின்னச் சின்னத் திருட்டில் ஈடுபடுபவர்களாக நடித்துள்ளனர். தென்காசி, தாய்லாந்து, மலேசியா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
அடுத்த மாதம் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், ‘சிந்துபாத்’ குறித்து ‘இந்து தமிழ் திசை’க்குப் பேட்டியளித்த அருண் குமாரிடம், ‘பண்ணையாரும் பத்மினியும்’ சரியாகப் போகவில்லை என்பதால்தான், ரசிகர்களைப் பழிவாங்க ‘சேதுபதி’ எடுத்தீங்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
“படம் சரியாகப் போகவில்லை என்றால், ரசிகர்கள் மேல் 100 சதவீதம் குறைசொல்ல முடியாது. படம் எப்படி ரிலீஸானது? ரிலீஸின்போது என்னென்ன பிரச்சினைகளைச் சந்தித்தது? போன்ற விஷயங்கள் உள்ளன.
முதல் வாரம் ‘ரம்மி’ ரிலீஸானது. அடுத்த வாரமே ‘பண்ணையாரும் பத்மினியும்’ ரிலீஸாகுது. அதே ஹீரோ, ஹீரோயின், ஒரே மாதிரியான கெட்டப். எனக்கு போன் பண்ணி, ‘உங்க படத்துல இருந்து ‘கூடை மேல கூடை வச்சு’ பாட்டை ஏன் தூக்கிட்டீங்க?’னு எல்லாம் கேட்டாங்க. அவங்களுக்கு நான் என்ன பதில் சொல்றது?
இதனாலத்தான் படம் ஓடலைன்னு சொல்லவில்லை. என்மேலும் சில தவறுகள் இருக்கலாம். இந்தப் படம் ஓடுவதற்கான முயற்சியை நான் இன்னும் கொஞ்சம் சிறப்பாகப் பண்ணியிருக்க வேண்டும். கேரளா மற்றும் கர்நாடகாவில் நடந்த திரைப்பட விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட்டு, மிகப்பெரிய ரெஸ்பான்ஸ்.
எனக்குக் கூட படத்தைப் பாராட்டி தமிழகத்தில் இருந்து ஏகப்பட்டக் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள். ஆனால், பெரும்பாலானவர்கள் படத்தைத் தியேட்டரில் பார்க்க முடியாமல், சிடியில் பார்த்தவர்கள். அதில் என்னுடைய தவறும் இருக்கிறது” என அதற்குப் பதிலளித்தார் அருண் குமார்.