

என் படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வாங்குவது அவ்வளவு பெரிய கனவாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மான்ஸ்டர்'. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தை, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.
காமெடிப் படமான இதில், எலி ஒன்று முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள், ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். வருகிற 17-ம் தேதி இப்படம் ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (மே 8) நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
அதில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, “படத்தின் வெற்றி, தோல்வி நம் கையில் இல்லை. படப்பிடிப்பில் சந்தோஷமாகப் பணிபுரிந்தால், அது மக்களிடையே அப்படியே கடத்தும்.
நான் நடித்து முதல் 'யு' சான்றிதழ் வாங்கிய படம் 'மான்ஸ்டர்'. 'வாலி' படத்தோட தயாரிப்பாளர் சக்கரவர்த்தி, 'பேசாமல் உங்க படத்துக்கு யு என்று பெயர் வைச்சுடுங்க. ஏனென்றால், யு சான்றிதழ் கிடைக்க வாய்ப்பே கிடையாது' என்று கிண்டலாகச் சொன்னார்.
என் படத்துக்கு யு சான்றிதழ் வாங்குவது அவ்வளவு பெரிய கனவாக இருந்தது” என்றார்.
மே 17-ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘Mr. லோக்கல்’, கவின் நடித்துள்ள ‘நட்புனா என்னானு தெரியுமா’ ஆகிய படங்களும் ரிலீஸாகின்றன.