

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘என்.ஜி.கே’. சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வருகிற 31-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது.
‘என்.ஜி.கே.’ படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்துப் பேசிய சாய் பல்லவி, “முதல் நாள் படப்பிடிப்புத் தளத்துக்கு வரும்போதே, ‘இது கோயில் மாதிரி. ஆகையால், கோயிலுக்குச் செல்லும்போது எப்படி பக்தியோடு செல்வோமோ, அப்படித்தான் வரவேண்டும் என்று கூறிவிட்டார் செல்வராகவன். மிகக் கண்டிப்போடு இருப்பார் என்று நினைத்தேன். ஆனால், அவருடைய சினிமா என்ற பள்ளிக்கூடத்தில் எளிமையாகக் கற்றுக் கொள்ளலாம் என்று 2, 3 நாட்களில் புரிந்து கொண்டேன்.
பொதுவாக, படப்பிடிப்புத் தளங்களில் செல்போன் உபயோகிப்போம், மற்ற படங்களைப் பற்றிப் பேசுவோம். ஆனால், செல்வராகவன் படப்பிடிப்புத் தளத்தில் 100 சதவீதம் அப்போது நடிக்க வேண்டிய காட்சிக்கான வசனங்களை வைத்துக்கொண்டு, ஆளுக்கொரு இடத்தில் நின்றுகொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டிருப்போம். ஒழுக்கம் என்றால் என்ன? என்று அங்குதான் கற்றுக் கொண்டேன்.
மேலும், படப்பிடிப்பு நடப்பதற்கு முதல் நாளே, மறுநாள் காட்சிக்குத் தேவையான வசனங்களை முன்பே வாங்கி, வீட்டில் பயிற்சி எடுத்துக்கொண்டு வருவோம். ஆனால், படப்பிடிப்புத் தளத்துக்கு வந்தபிறகு அவர் சொல்வதைக் கேட்டு நடித்தால்தான் சரியாக இருக்கும். ஒரு வசனத்துக்கு எப்படி முகபாவனை செய்ய வேண்டும்? எப்படி அழவேண்டும்? என்று ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகச் சொல்லிக் கொடுப்பார். அதுமட்டுமில்லாமல், கோபப்பட்டு நடிக்கும் காட்சிகளில் கூட மூச்சுவிடுவது வெளியே தெரியக்கூடாது என்று கூறுவார். அவர் நினைக்கும் நடிப்பு நம்மிடம் வரும்வரை விடமாட்டார்.
நடிப்பு என்றால் என்ன? என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேனோ, அதெல்லாம் முற்றிலும் தவறாகிவிட்டது. ஒருநாள், காலை முதல் மாலை வரை அவர் நினைத்த மாதிரி நடிப்பு எனக்கு வரவில்லை. ‘நாளை பார்க்கலாம்’ என்று கூறிவிட்டார். அன்று இரவு, ‘எனக்கு நடிப்பு வரவில்லை. மருத்துவராகவே இருந்து விடுகிறேன்’ என்று என் அம்மாவிடம் கூறிவிட்டேன். அன்று முழுவதும் அழுதுகொண்டே இருந்தேன்.
ஆனால், மறுநாள் ஒரே ‘டேக்’கில் அவர் நினைத்தது வந்துவிட்டது என்று கூறிவிட்டார். அதை நம்பாமல், ‘என் அம்மா உங்களிடம் பேசினார்களா?’ என்று செல்வராகவனிடம் கேட்டேன். ‘இல்லை, நான் கேட்டது கிடைத்துவிட்டது’ என்றார்.
பின்னர், சூர்யா சாரிடம் கேட்டபோது, ‘நானும் நிறைய ‘டேக்’ வாங்கித்தான் நடிக்கிறேன்’ என்றார். அதன் பிறகுதான் சிறிது ஆறுதலாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.