

தன்னுடைய உடல் எடையைக் குறைத்த அனுபவத்தைப் பற்றிப் புத்தகம் எழுதியுள்ளார் அனுஷ்கா.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நாயகிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் அனுஷ்கா. பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ‘பாகுபலி’ படத்தில் தேவசேனாவாக நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றார்.
அனுஷ்கா நடிப்பில் 2015-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘இஞ்சி இடுப்பழகி’. தெலுங்கில் ‘சைஸ் ஜீரோ’ என்ற பெயரில் இந்தப் படம் ரிலீஸானது. அனுஷ்காவுடன் சேர்ந்து ஆர்யா, பிரகாஷ் ராஜ், ஊர்வசி, பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
குண்டான உடல்வாகு கொண்ட பெண், தன்னுடைய உடல் எடையைக் குறைக்க எடுக்கும் முயற்சிகள்தான் இந்தப் படம். ஒரிஜினலாக இருக்க வேண்டும் என்பதற்காக, இந்தப் படத்துக்காக ஏராளமாக எடை கூடினார். அவருடைய துரதிர்ஷ்டம், ஏற்றிய எடையை அவரால் குறைக்கவே முடியவில்லை.
இத்தனைக்கும் அனுஷ்கா யோகா டீச்சரும் கூட. ஆனால், என்ன செய்தும் அவரால் எடையைக் குறைக்க முடியவில்லை. இதனால், பட வாய்ப்புகள் நழுவின.
பின்னர், நியூட்ரிஷியன் லூக் கோட்டின்ஹோ உதவியுடன் படிப்படியாகத் தன் உடல் எடையைக் குறைத்துள்ளார் அனுஷ்கா. ஏற்கெனவே பார்த்த ஸ்லிம் அனுஷ்கா போல மறுபடியும் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டார்.
இந்நிலையில், தன்னுடைய எடைக் குறைப்பு அனுபவத்தைப் பற்றிப் புத்தகம் எழுதியுள்ளார் அனுஷ்கா. நியூட்ரிஷியன் லூக் கோட்டின்ஹோ, அனுஷ்கா இருவரும் இணைந்து இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளனர். ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தை, பென்குவின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.